தனது தங்கை திருமணத்திற்காக விஜயகாந்த் பணத்துடன் மண்டபத்திற்கு வந்தார் என்று வில்லன் நடிகர் பொன்னம்பொலம் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்த நடிகர் விஜயகாந்த் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகி ஒய்வில் இருந்து வருகிறார். அவர் திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக இருந்த காலகட்டத்தில் சக நடிகர்கள் மட்டுமல்லாமல் பலருக்கும் உதவிகள் செய்துள்ளார்.
தற்போது அவர் ஆக்டீவாக இல்லாத நிலையில், சக நடிகர்கள் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் விஜயகாந்த் செய்த உதவிகள் அவரின் மனப்பக்குவம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள் குறித்து பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பொன்னம்பலம் தனது தங்கை திருமணத்திற்கு விஜயகாந்த் செய்த உதவி குறித்து பேசியுள்ளார்.
1988-ம் ஆண்டு பிரபு ரகுவரன் நடிப்பில் வெளியான கலியுகம் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பொன்னம்பலம், பல்வேறு படங்களில் அடியாள் மற்றும் வில்லன் நடிகராக நடித்து முத்திரை பதித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜயகாந்த் குறித்து பேசியுள்ளார்.

எனது 2-வது தங்கையின் திருமணம். ஆனால் எனக்கு ஷூட்டிங் நடக்க 3 மாதங்கள் இருகிறது. கையில் பணம் இல்லை. அப்போது விஜயகாந்த் சார் என்னை அழைத்து தங்கை கல்யாணம் எப்போ என்று கேட்டார். வரும் 19-ந் தேதி இன்னும் 3 நாட்கள் தான் இருக்கிறது என்று சொன்னேன். அதற்கு அவர் பணத்துக்கு என்னடா பண்ணபோற என்று கேட்டுவிட்டு ஒரு ஐடியா சொன்னார். உனக்கு 3 மாதம் கழித்துதான் என்னுடன் சோலோ ஃபைட், இந்த ஃபைட் காட்சியை நாளைக்கே எடுத்துவிடலாம் என்று சொல்லி எடுத்தார்.
மறுநாள் என் தங்கைக்கு கல்யாணம் முன்னாடி நாள் இரவு நானும் விஜயகாந்த் சாரும் ஃபைட் பண்றோம். பகலில் வேறு ஷூட்டிங்கில் இருந்த அவர் நைட் என்னுடன் ஃபைட் பண்ணுகிறார். விடியற்காலை ஷூட்டிங் முடிந்தது. நான் போய் குளித்துவிட்டு வருவதற்குள் விஜயகாந்த் மண்டபத்திற்கு வந்துவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் அந்த ஃபைட் காட்சிக்கான எனது சம்பளம் ரூ50 ஆயிரத்தை எடுத்து வந்தார். அதை வைத்து எனது தங்கை திருமணத்தை நடத்தினேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil