நாகை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் கோயிலில் நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை இயக்குனர் தியாகராஜன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. வேண்டுகிறவர்களுக்கு வேண்டும் வரம் அருளுபவராக இங்குள்ள முருகன் வணங்கி போற்றப்படுவதால், இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
அந்தவகையில், திரைப்பட நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை இயக்குனர் தியாகராஜன் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் எட்டுக்குடி முருகன் கோயிலுக்கு வந்திருந்தனர். அதனையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பு தரிசனம் செய்விக்கப்பட்டது. மூலவரான முருகப்பெருமானுக்கு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.
எட்டுக்குடி கோயிலுக்கு வந்திருந்த பலரும் நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தையுடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
க.சண்முகவடிவேல்