பிரஷாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள அந்தகன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்த நடிகர் பிரஷாந்த் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்கு தனது வாழ்க்கையை உதாரணமாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சாக்லேட்பாய் அந்தஸ்துடன் வலம் வந்தவர் நடிகர் பிரஷாந்த். 90-களில் வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர், அடுத்து மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். சினிமாவில் அதிக பெண் ரசிகைகளை கொண்ட நடிகரான பிரஷாந்த் நடிப்பில் ஜானி என்ற படம் வெளியானது.
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு பின் தமிழில் வேறு எந்த படங்களிலும் நடிக்காத பிரஷாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் படத்தில் நடித்துள்ளார். அவரது அப்பாவும் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவருமான தியாகராஜன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படம், இந்தியில் வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, கார்த்திக், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் நேற்று (ஆகஸ்ட் 9) வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தின் மூலம் பிரஷாந்த் கம்பேக் கொடுத்துள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர். அதேபோல் விமர்சனரீதியாக இந்த படத்தின் பிரஷந்தின் நடிப்பு பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
இதனிடையே சென்னை கமலா திரையரங்கில் ரசிகர்களை சந்தித்த நடிகர் பிரஷாந்த், வைகாசி பொறந்தாச்சு படத்தில் நடித்தபோது முதல்முறையாக பெரிய திரையில், எனது முகத்தை இந்த திரையரங்கில் தான் பார்த்தேன். இப்போது மீண்டும் அந்தகன் படத்தை பார்க்க வந்துள்ளேன். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது தெரிகிறது என தனது கடந்த கால வாழ்க்கையை குறித்து நடிகர் பிரஷாந்த் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“