நடிகர் மாதவன் தனது அடுத்த படத்திற்காக கெட்டப்பை மாற்றி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
2000-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைப்பாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் மாதவன். தொடர்ந்து மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், ஆயுத எழுத்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
2010-ம் ஆண்டு மன்மதன் அம்பு படத்தில் நடித்த மாதவன், 6 வருட இடைவெளிக்கு பிறகு இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து விக்ரம் வேதா, சைலன்ஸ், மாறா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், ராக்கெட்ரி படத்தை இந்தி தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகவும் மாறினார்.
அதன்பிறகு தமிழில் இதுவரை படங்களில் கமிட் ஆகாமல் இருந்த மாதவன் தற்போது இயக்குனர் ஜவகர் ஆர் மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனிடையே மாதவன் தனது புதிய படத்திற்காக கெட்டப்பை மாற்றியுள்ளார். இது தொடர்பான அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பதிவில் புதிய ப்ராஜக்ட்டுக்கான தோற்றம் மகிழ்ச்சியாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார். இந்த மாத தொடக்கத்தில், தயாரிப்பு நிறுவனமான மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் லிமிடெட், திருச்சிற்றம்பலம் பட புகழ் ஜவஹர் ஆர் மித்ரன் இயக்கும் படத்தில் மாதவன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மாதவனின் பதிவை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில், ஒரு ரசிகர், “100% அவர் இந்த புதிய படத்தில் ஒரு போலீஸ்காரர்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “புதிய தோற்றம்.. சூப்பர்காப்?” என்று கருத்து தெரிவித்தார். இருப்பினும், அவரது பெரும்பாலான ரசிகர்கள் தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஒரு கமெண்ட், ‘நல்ல ஒயின் போல வயதாகிவிட்டதா? என்றும், மற்றொரு ரசிகர், “ஏன் மேடி, முதுமை அடைகிறீர்கள்?” என்று கேட்டுள்ளார்.
ரசிகர்களால் மேடி என்று அழைக்கப்படும் மாதவன், தனது மகன் வேதாந்தை விட இளமையாக இருக்கிறார் என்று ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“