தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த ரஜினிகாந்த் ஒரு கட்டத்தில் மனநோயாளி முத்திரை குத்தப்பட்டு வீழ்ச்சியை சந்தித்தபோது, தனது பாடல் மூலம் பலருக்கும் பதிலடி கொடுத்தவர் கண்ணதாசன் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை படங்களில் தொடங்கி தற்போதைய டிஜிட்டல் சினிமாவின் முன்னணி நடிகர்களில் சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். கே.பாலச்சந்தர் இயக்கததில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் நடித்த ரஜினிகாந்த், பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை, போக்கிரி ராஜா, பில்லா, மிஸ்டர் பாரத், ப்ரியா என பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். சினிமாவில் ரஜினிகாந்த் வேகமாக வளர்ந்து வந்தாலும் அவருடன் தொடர்ந்து சர்ச்கைள் மற்றும் பொய்யான தகவல்களும் பரவ தொடங்கியது. அந்த வகையில் 1978-ம் ஆண்டு ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, அம்ரீஷ் ஆகியோர் நடிப்பில வெளியான பிரியா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, நடிகர் ரஜினிகாந்த் மனநல மருத்துவமனையில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் அவரை பிடிக்காதவர்கள், ரஜினிகாந்த் இனி நடிக்க மாட்டார். அவர் பைத்தியம் அவரின் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று பரப்ப தொடங்கியுள்ளனர். இந்த தகவல்களின் காரணமாக எந்த தயாரிப்பாளரும் ரஜினியை வைத்து படம் தயாரிக்க விரும்பவில்லை. அந்த நேரத்தில் இயக்குனரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்கிறார்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த கே.பாலாஜி அவரை சந்தித்து டேட் கேட்க, எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை சார் நான் நடிக்கிறேன் . மற்றதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பட வேலைகள் தொடங்கியபோது, கே.பாலாஜியின் நண்பர்கள் ரஜினியை வைத்து படம் பண்ணாதே, அவரை நம்ப யாரும் தயாராக இல்லை. பட வேலைகள் முடிந்து இறுதியில் வெளியாகாமல் போனால் என்ன செய்வாய் என்று கேட்டுள்ளனர்.
நண்பர்களின் பேச்சால் கலங்கிப்போன கே.பாலாஜி உடனடியாக கவிஞர் கண்ணதாசனிடம் சென்று இது பற்றி பேசியுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன் நீ போ எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் பட வேலைகளை கவனி என்று கூறியுள்ளார். அந்த நேரத்தில் ரஜினிகாந்த் குறித்து அவதூராக பேசிய அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் கண்ணதாசன் எழுதிய பாடல் தான் ‘’நாட்டுக்குள்ள எனக்கொரு பேருண்டு’’ என்ற பாடல். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அமிதாப் பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்த டான் படத்தின் ரீமேக்கான பில்லா படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்த நிலையில், இந்த பாடல் நாட்டுப்புற கலைஞரான நடித்திருந்த ரஜினிகாந்துக்கு எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“