தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வாழை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படமே பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்து தனுஷ் நடிப்பில், கர்ணன், உதயநிதி நடிப்பில் மாமன்னன் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இவர் அடுத்ததாக வாழை என்ற படத்தை இயக்கியிருந்தார். சிறுவர்களை மையமாக வைத்து இயக்கியிருந்த இந்த படத்தில் நிகிலா விமல், கலையரசன் ஆகியோர் நடித்திருந்தனர்.
90-களின் இறுதியில், நெல்லை பகுதியில் நடந்த ஒரு விபத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள வாழை திரைப்படத்தில், வாழைக்காய் சுமக்கும் தொழிலாளிகளின் வாழ்விலை காட்டியுள்ளதாக கூறப்பட்டது. மேலும் இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, இயக்குனர் பாலா, மிஷ்கின், உள்ளிட்ட முன்னணி இயக்குனர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.
இதனிடையே தற்போது நடிகர் ரஜினிகாந்த் வாழை படத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’மாரி செல்வராஜ் அவர்களுடைய வாழை படம் பார்த்தேன்.ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு.
மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.
மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“