வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் ரஜினிகாந்த், ஓய்வுக்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்த நிலையில், தற்போது சென்னை திரும்பியுள்ள ரஜினிகாந்த் கூலி படத்தின் படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறார்.
இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரஜினிகாந்த் சமீபத்தில் வேட்டையன் படத்தை முடித்துவிட்ட நிலையில், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடிக்க உள்ளார். கூலி படம் தொடங்குவதற்கு முன்பாக ஓய்வு எடுப்பதற்காக, ரஜினிகாந்த் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.
அபுதாபியில் நடிகர் நடிகர் ரஜினிகாந்த்,பிரபல தொழிலதிபர் லுலு குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.ஏ.யூசுப் அலியுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பதவியது. இதனிடையே தற்போது ஐக்கிய அரபு அமீரக சுற்றுப்பயணத்தை முடித்த ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ள நிலையில், அடுத்து கூலி படத்தின் படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறார்.
ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஒருவாக உள்ள ஆக்ஷன் படமான 'கூலி' படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் 6 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் தற்போது சென்னையில் செட் வேலைகள் நடந்து வருகிறது. ஆக்ஷன் டிராமாவாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள கூலி படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கூலி' படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியிருக்கும் 'கூலி' படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையும், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பும், சண்டைக்காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இரட்டையர் அன்பரிவ்வும் அமைக்க உள்ளனர்.
கலாநிதி மாறன் தனது சன் பிக்சர்ஸ் பேனரில் தயாரிக்க உள்ள இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் 2025 ஜனவரி அல்லது கோடையில் வெளியாக வாய்ப்புள்ளது, மேலும் லோகேஷ் கனகராஜ் இந்த படம் ஒரு தனியான படமாக இருக்கும் என்றும் அவரது எல்.சி.யூ-வின் ஒரு பகுதியாக இருக்காது என்றும் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“