பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே புதுவையில் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்த 3 காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்நிலையில் புதுவையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கிறது. இதற்காக இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் ஓட்டல் அக்கார்டு வந்தார். உப்பளம் துறைமுக வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த அனைத்து பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலை வெளிச்சமின்றி இருளாக இருந்ததாலும், சூறை காற்று வீசியதாலும் குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு தொடங்கவில்லை.
2 மணி நேர தாமதத்திற்கு பின் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். ரசிகர்களால் தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதற்காக உப்பளம் துறைமுகத்தில் போலீசாரும், தனியார் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். துறைமுக வளாகம் கேட் இழுத்து பூட்டப்பட்டிருந்தது. யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ரஜினி படத்தின் படப்பிடிப்பு தகவலறிந்த ரசிகர்கள் துறைமுக பகுதிக்கு வந்து சென்றனர்.
நேற்றைய படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த், வெளிநாட்டு நடிகருடன் சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பிற்காக பயன்படுத்தும் ஹெலிகாப்டர் புதுச்சேரி நகர பகுதியில் வலம் வந்தது. படப்பிடிப்பு முடிந்து கேரவன் வேனில் இருந்து வேட்டி சட்டையுடன் ரஜினி இறங்கி செல்லும் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“