நான் ஆணவ கொலைக்கு ஆதரவானவன் அல்ல. சமூக வலைதளங்களில் என்மீது உள்ள தேவையற்ற வன்மத்தை தவிர்த்து விடுங்கள் என்று கைக்கூப்பி கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கோவை ராம் நகர் பகுதியில் உள்ள ராமர் கோவிலில் கவுண்டம்பாளையம் திரைப்பட படக்குழுவினர் சாமி தரிசனம் செய்தனர். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் இயக்குனருமான ரஞ்சித், கவுண்டம்பாளையம் திரைப்படம் நீண்டகால பிரச்சனைக்கு பிறகு நேற்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது. ஆதரவளித்த மக்களுக்கு நன்றி.
திரையரங்குகள் குறைவாக கிடைத்ததில் பெரிய அதிர்ச்சி எதுவும் இல்லை. இது எதிர்பார்த்தது தான். யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை ஆனால் சிறகுகள் உடைக்கபடுகிறது என்பதை உணர்கிறேன். நான் பிறந்த கோவை மாவட்டத்திலும் குறைந்த திரையரங்குகள் கிடைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது. பெற்றோர்களுக்காகவும் குடும்பங்களுக்காகவும் தான் இந்த படத்தில் செய்தி சொல்ல வருகிறேன்.
என்மீது உள்ள தேவையற்ற வன்மத்தை தவிர்த்து விடுங்கள் என கைக்கூப்பி கேட்டுக்கொள்கிறேன். வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. என்மீது சமூக வலைதளங்களில் திரித்து கூறப்படுகிறது. நான் ஆணவ கொலைக்கு ஆதரவானவன் அல்ல. இந்த படத்தில் அறிமுகமாகியுள்ள ஹீரோ ஹீரோயின் இருவரும் நன்கு நடித்துள்ளார்கள். வில்லன் கதாபாத்திரமும் நன்றாக நடித்துள்ளார். திரைப்படத்தை அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள்.
சென்சார் போர்டு சர்டிபிகேட் இருந்தும் அதிக திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் நாங்கள் தோல்வியடையவில்லை. இப்படத்தை பார்த்த மக்கள் பாராட்டுகிறார்கள். அதுவே எங்கள் வெற்றி. இன்னும் அதிக திரைகள் கிடைக்கும் என நம்புகிறேன். கூடிய விரைவில் இந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாகும். இதிலும் சர்ச்சை வந்தால், வீடு வீடாக கேசெட் தருவோம்.
நான் ஆணவ கொலைக்கு ஆதரவானவன் அல்ல அல்ல அல்ல என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறேன். சினிமாவால் தான் வன்முறைகள் அதிகமாகிறது என்று என்னால் சொல்ல முடியாது. அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறது. ரஞ்சித் 3.O என்ற புதிய உத்வேகத்துடன் இருக்கிறேன் என தெரிவித்தார்.
கவுண்டம்பாளையம் திரைப்படத்தில் நடித்த நடிகை ஆல்பியா செய்தியாளர்களிடம் பேசிய போது, படத்தை பார்க்காமலே சர்ச்சையை கிளப்பி விட்டார்கள் படத்தை பார்த்திருந்தால் இந்த சர்ச்சையே வந்திருக்காது என்று கூறியுள்ளார். கவுண்டம்பாளையம் திரைப்படத்தில் நடித்த நடிகை அனீஷ் கூறுகையில்,இந்தத் திரைப்படம் ஜாதி படமே கிடையாது. நல்ல படமாக தான் எடுக்கப்பட்டிருக்கிறது. சமூகத்திற்கு எதிராக எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.