விவாகரத்து வழக்கு போய்க்கொண்டு இருக்கிறது. இன்னும் விவாகரத்து ஆகவில்லை. ஆனால், இன்று உலகமே பார்க்கும்படி நடந்த விஷயங்கள் என் குடும்பத்தை நிலைகுலைய வைத்துள்ளது, 18 ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்த நபர் அனைத்தையும் உடைத்து எறிந்துவிட்டு சென்றுவிட்டார் என்று ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த ஜோடி ஜெயம்ரவி ஆர்த்தி. மகிழ்ச்சியாக இருந்த இந்த தம்பதி விவாகரத்து பெற உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்த நிலையில், தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த ஜெயம்ரவி, அதற்காக சென்னை குடும்ப நல நீதிமன்றத்திலும் விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த விவாகரத்து வழக்கில், இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே விவாகரத்துக்கு அறிவிப்புக்கு பின் தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றிக்கொண்ட இவர் தற்போது பராசக்தி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து வரும் கராத்தே பாபு படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுததியுள்ளது. இதனிடையே, நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) தயாரிப்பாளர் ஐசரி கணேசன் மகள் திருமணத்திற்கு, பாடகி, கெனிஷா ஃபிரான்சிஸூடன் பங்கேற்று பலரையும் ஆச்சரித்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், தனது மகன்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஓர் ஆண்டாக நான் மௌனமாக இருந்தேன். நான் பலவீனமானவள் என்பதற்காக அல்ல, என் மகன்களுக்கு என் குரலை விட அமைதி மிகவும் தேவைப்பட்டதால். என் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டையும், ஒவ்வொரு அவதூறையும், ஒவ்வொரு கொடிய கிசுகிசுப்பையும் நான் உள்வாங்கிக் கொண்டேன்.
என்னிடம் உண்மை இல்லை என்பதற்காக அல்ல, என் பிள்ளைகள் பெற்றோரில் யாரையாவது ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் சுமையைச் சுமக்க நான் விரும்பவில்லை. இன்று, உலகம் கவனித்த தோற்றங்களையும், புகைப்படங்களையும், அவற்றிற்கு வைக்கப்பட்ட தலைப்புகளையும் பார்க்கும்போது, எங்கள் உண்மை நிலை மிகவும் வித்தியாசமாக தெரிகிறது. எனது விவாகரத்து வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நான் 18 ஆண்டுகள் நேசம், விசுவாசம் மற்றும் நம்பிக்கையுடன் நின்ற மனிதர், என்னிடமிருந்து மட்டுமல்ல, அவர் உறுதியளித்த பொறுப்புகளிலிருந்தும் விலகிச் சென்றுவிட்டார்.
பல மாதங்களாக, அவர்களின் உலகத்தின் சுமை என் தோள்களில் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு புத்தகமும், ஒவ்வொரு உணவும், இரவில் சிந்தப்பட்ட ஒவ்வொரு அமைதியான கண்ணீரும் என்னால் தாங்கப்பட்டது, நான் அன்பை நினைத்து வருத்தப்படவில்லை. ஆனால் அந்த அன்பு பலவீனமாக மறுஎழுதப்படுவதை நான் சகித்துக் கொள்ள மாட்டேன். என் குழந்தைகளுக்கு வயது 10 மற்றும் 14. அவர்களுக்கு அதிர்ச்சி அல்ல, பாதுகாப்பு தேவை.
அவர்களுக்கு சட்டம் புரிந்துகொள்ளும் வயது இல்லை. ஆனால் தங்கள் கைவிடப்பட்டதை உணரும் வயதில் இருக்கிறார்கள். பதிலளிக்கப்படாத ஒவ்வொரு அழைப்பும், ரத்து செய்யப்பட்ட ஒவ்வொரு சந்திப்பும், எனக்காக அனுப்பப்பட்டு அவர்களால் படிக்கப்பட்ட ஒவ்வொரு குளிர்ந்த செய்தியும் - இவை வெறும் தவறுகள் அல்ல. அவை காயங்கள் என்று பதிவிட்டுள்ளார்.