தென்னிந்திய சினிமாவில் தற்போது பல வெற்றிப்படங்களிலும் பெரிய பட்ஜெட் படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சமுத்திரக்கனி தான் முதன் முதலில் சென்னை வந்த அனுபவத்தை ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாக உன்னை சரணடைந்தேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சமுத்திரக்கனி. தொடர்ந்து விஜயகாந்த் நடிப்பில் நெறஞ்சமனசு என்ற படத்தை இயக்கினார். இந்த இரு படங்களுமே கமர்ஷியலாக அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதன்பிறகு, 2007-ம் ஆண்டு சசிகுமார் இயக்கததில் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கிய சமுத்திரக்கனி, 2009-ம் ஆண்டு மீண்டும் நாடோடிகள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றது. அதன்பிறகு பேராளி, நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன் உள்ளிட்ட சில படங்களை இயக்கினார்.
கடைசியாக தமிழில், வினோதய சித்தம், தெலுங்கில் ப்ரோ ஆகிய படங்களை இயக்கிய சமுத்திக்கனி, தற்போது, தெலுங்கு மற்றும் தமிழில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே சமீபத்தில் தான் சினிமா வாய்ப்பு தேடி முதன் முதலில் சென்னை வந்த அனுபவம் குறித்து பேசியுள்ள சமுத்திரக்கனி, 10வது படிக்கும்போது சென்னைக்கு அரைக்கால் ட்ரவுசருடன் ஓடி வந்தேன். எங்கே இறங்க வேண்டும் என்று தெரியவில்லை. கண்டக்டர் பல இடங்களை சொல்லி கடைசியாக எல்.ஐ.சி என்று சொன்னார். அங்கே இறங்கினேன்.
டி.நகருக்கு எப்படி போக வேண்டும் என்று தெரியவில்லை. பசி அதிகமானதால் அங்கு ஒரு பாட்டி கடைசிக்கு சென்றேன். கடை மூடும் சமயத்தில் அந்த பாட்டி 4 இட்லி கொடுத்தார். அதை சாப்பிட்டுவிட்டு எவ்வளவு என்று கேட்டபோது, எங்கிருந்து வர என்று கேட்க, நான் ராஜபாளையம் பக்கததில் சேத்தூர் என்று சொல்ல, இங்க எதுக்கு வந்தே என்று கேட்டார். நான் நடிக்க வந்தேன் என்று சொல்ல, சரி போ என்று சொல்லிவிட்டார். என்னிட்ட காசு வாங்கவில்லை. அதன்பிறகு ஒரு ப்ளாட்ஃபார்மில் படுத்திருந்தேன்.
அப்போது ஒரு காவலர் வந்து எழுப்பினார். என்னுடன் படுத்திருந்த அனைவரும் ஓடிவிட்டார்கள். அந்த ஏட்டய்யா என்னிடம் விசாரித்தபோது நான், சேத்தூர் என்றும் நடிக்க வந்திருக்கிறேன் என்றும சொன்னேன். அவர் என்னை காவல் நிலையத்தில் படுக்க வைத்து விடிந்ததும், எனக்கு டீ வாங்கி கொடுத்து, நீ தேடி வந்த விஷயம் ரொம்ப கஷ்டம். இப்படியே ஊருக்கு போய்விடு என்று சொன்னார். நான் அவரிடம் டி.நகருக்கு வழி கேட்டுக்கொண்டு சென்றேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“