அவதூறு வீடியோ : 2 யூடியூப் சேனல்களை முடக்க கோரி நடிகர் சரத்குமார் புகார் | Indian Express Tamil

அவதூறு வீடியோ : 2 யூடியூப் சேனல்களை முடக்க கோரி நடிகர் சரத்குமார் புகார்

சரத்குமார் ராதிகா இருவரும் தங்களது சமத்துவ மக்கள் கட்சியின் முன்னேற்றத்திற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

sarathkumar
Sarathkumar

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், 2 யூடியூப் சேனல்கள் மீது சென்னை காவல் ஆணையர் புகார் அளித்துள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வந்த சரத்குமார், தற்போது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் கேரக்டர் நடிகராக முக்கியத்துவம் பெற்றுள்ளார்.

அதேபோல் இவரது மனைவியும் பிரபல நடிகையுமான ராதிகா, சினிமா சின்னத்திரை என பிஸியாக வலம் வந்த நிலையில், சமீப காலமாக திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் சரத்குமார் ராதிகா இருவரும் தங்களது சமத்துவ மக்கள் கட்சியின் முன்னேற்றத்திற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் நடித்திருந்தார். இதனிடையே கடந்த சில மாதங்களாக நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருகிறார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வந்தாலும், அதை கண்டுகொள்ளாத சரத்குமார் தொடர்ந்து ரம்மி விளம்பரங்களில் நடித்து வருகிறார்.  

இந்நிலையில், இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நடிகர் சரத்குமார் தன்னைப்பற்றியும், தனது மனைவி ராதிக உள்ளிட்ட குடும்பத்தினர் பற்றியும் அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட 2 யூடியூப் சேனல்கள் மீது புகார் அளித்துள்ளார். இது குறித்து சரத்குமார் அளித்த புகார் மனுவில்,

கடந்த சில தினங்களாக இரண்டு யூடியூப் சேனல்கள் என்னைப்பற்றியும் எனது குடும்பம் மற்றும் கலைத்துறை பற்றியும் தவறாக சித்தரித்து இழிவுப்படுத்தும் வகையில், வீடியோ வெளியிட்டுள்ளனர். உண்மைக்கு புறம்பான கற்பனை செய்திகளை தறவான நோக்கத்தில், தொடர்ந்து வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர்.

எனது புகழுக்கு களங்கம் கற்பித்து தனிப்பட்ட முறையில், தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இத்தனைகைய இழிவான செயலில் ஈடுபட்ட நபர் யாராக இருந்தாலும், கண்டறிந்து தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actor sarathkumar complaint against two youtube channels