/indian-express-tamil/media/media_files/2025/04/25/BmN31DeZewgcZyftoRPR.jpg)
வில்லன் நடிகராக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில், ஹீரோவாக பல வெற்றிப்படங்களை கொடுத்த சரத்குமார் தற்போது படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜீ தமிழ் பிரபலம் ஒருவருக்கு யாரும் எதிர்பார்க்காத உதவியை செய்து இருக்கிறார்.
முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில், ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரலமானவர் சந்துரு. 37 வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், தற்போது 4-வது கட்டத்தில் இருக்கிறார். இதை அறிந்த அவரது குடும்பத்தினர், பரிதவித்து வருகின்றனர். சந்துருவிற்கு, 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஆனால் சந்துரு இந்த நிலையில் இருப்பது அவரது குழந்தைக்கு தெரியாது.
அதே சமயம், என்னுடைய அப்பா இந்த நோயிலிருந்து கஷ்டப்பட்டு ஜெயித்தார் என்று என் குழந்தை தைரியமாக சொல்ல வேண்டும் என்பதற்காக நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று சந்துரு கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு சுற்றிலும் வித்தியாசமான நடிப்பை கொடுத்து வரும் சந்துரு, நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மற்றும் நடுவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இதனிடையே, சந்துருவிற்கு, நடிகர் சரத்குமார் எதிர்பாராத ஒரு உதவியை செய்துள்ளார்.
ஜீ தமிழில் கடந்த வாரம், டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் சரிகமப நிகழ்ச்சி இரண்டும் இணைந்து மகா சங்கமம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சரத்குமார் திடீரென்று டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சந்துரு என்று ஒரு போட்டியாளர் இருக்கிறாரே அவரை நான் பார்க்கலாமா என்று கேட்க அடுத்து மேடைக்கு வந்த சந்துருவை கட்டித்தழுவி பாராட்டியுள்ளனார் சரத்குமார்.
மேலும், நீங்கள் தான் உண்மையான போராட்டக்காரர். உங்களுடைய டான்ஸ் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. நான் பலமுறை உங்களை பார்த்து வியந்து இருக்கிறேன். நீங்கள் இன்னும் வெற்றி பெற வேண்டும். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். நான் சின்ன வயதில் கஷ்டப்பட்டு உழைக்கும் போது என்னுடைய அப்பா நல்லபடியாக இருந்தார். ஆனால் நான் நல்ல வசதிக்கு வந்த பிறகு என்னால் சரி செய்ய முடியாத அளவிற்கு என் அப்பாவிற்கு ஒரு நோய் வந்தது. அதுதான் உங்களுக்கும் வந்திருக்கிறது. ஆனால் நீங்கள் அந்த நோயோடு எதிர்த்து போராடும் வலிமையில் இருக்கிறீர்கள். ஆனால் எங்க அப்பாவுக்கு அந்த வலிமை இல்லை.
நீங்கள் எப்போதும் உங்களுடைய தன்னம்பிக்கையை விடக்கூடாது. உங்களுடைய திறமையை பார்த்து நான் வியந்து தான் உங்களுக்கு ஒரு ஆஃபர் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று கேள்விப்பட்டேன் அதனால் அதற்கு வாய்ப்பு கொடுக்கிறேன். எனது அடுத்த படத்தில் நீங்கள் கண்டிப்பாக நடிக்கிறீர்கள் என்று சொல்லி, அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார் சரத்குமார்.
படத்திற்கு முன்பு முதலில் ஒரு வெப்சீரிஸ் எடுக்கிறேன் அந்த வெப் சீரிஸிலும் நீங்கள் என்னோடு சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று சொல்ல, இதை சற்றும் எதிர்பார்க்காத சந்துரு அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். பிறகு சரத்குமாரிடம் நான் உங்களை ஒரு முறை கட்டிப்பிடித்துக் கொள்ளலாமா என்று கேட்க, தாராளமாக என்று சொல்லி சரத்குமாரும் சந்துருவை கட்டிப்பிடித்து இருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.