வரலட்சுமி நடிக்க வேண்டும் என்று சொன்னபோது முதலில் அதற்கு நான் சம்மதம் சொல்லவில்லை என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சரத்குமார். 1986-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சமஜம்லோ ஸ்ரீத்ரி என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1988-ம் ஆண்டு வெளியான கண் சிமிட்டும் நேரம் என்ற படத்தில் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் அறிமுகமானார் சரத்குமார்.
தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து 90-களில் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்த சரத்குமார் நடிப்பில், சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக, சூர்யவம்சம் உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியான வரலாற்று திரைப்படமாக பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டையார் கேரக்டரில் நடித்திருந்தார்.
தற்போது தி ஸ்மைல் மேன், பரம்பொருள், நிறங்கள் மூன்று ஆகிய தமிழ் படங்களிலும், கன்னடத்தில் ரோமியோ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் சரத்குமார் அளித்த பேட்டி ஒன்றில், தனது குடும்பம் குழந்தைகள்’ மற்றும் மனைவி ராதிகா தொடர்பான பல தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
நல்ல நண்பர்களாக இருந்த நானும் ராதிகாவும் திருமணத்தில் இணைவதாக முடிவு செய்து அந்த முடிவில் மாற்றம் இல்லாமல் திருமணம் செய்துகொண்டோம். இது என் வாழ்க்கையில் நடந்த ஒரு அனுபவம். பல குடும்பங்கள் இணைகின்றன. பல குடும்பங்கள் பிரிகின்றன. பிரிந்திருந்தாலும் எனது குடும்பத்தை ஒன்றாக இணைப்பது என் மனைவி ராதிகாதான். எனது குழந்தைகளை அவர் குழந்தைகள் போல் பார்த்துக்கொள்கிறார்.
எனது முதல் மனைவி வீட்டுக்கு வந்து போகவில்வை என்றாலும் கூட அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக செய்வார் ராதிகா. அதேபோல் வரலட்சுமி நடிக்க வேண்டும் என்று சொன்னபோது அதற்கு நாள் முதலில் சம்மதிக்கவில்லை. அப்போது அவரின் அம்மாவும் ராதிகாவும் ஒன்றாக வந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னிடம் பேசினார்கள். ஏன் நடித்தால் என்ன தப்பு என்று கேட்டு என்னை சம்மதிக்க வைத்தார்கள். இது மறக்க முடியாத நிகழ்வு. அதேபோல் வரலட்சுமி எது செய்தாலும் அப்பாவை கேட்காமல் செய்யக்கூடாது என்று அவரின் அம்மா சொல்லியிருக்கிறார்.
அந்த மாதிரியான சூழலில் நான் வரலட்சுமியிடம் நடிக்க வேண்டாம் என்று சொன்னபோது இருவரும் ஒன்றாக வந்து பேசினர். அந்த அளவுக்கு ராதிகா அனைவரையும் அறவணைத்து பார்த்துக்கொள்பவர். வீட்டைக்கும் கட்டுக்கோப்பாக பார்த்தக்கொள்கிறார் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
கடந்த 1984-ம் ஆண்டு சயா என்ற பெண்ணை சரத்குமார் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வரலட்சுமி என்ற மகள் இருக்கிறார். 2000-ம் ஆண்டு மனைவியை விவாகரத்து செய்த சரத்குமார், கடந்த 2001-ம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி என்ற படத்தில் சிம்புக்கு ஜோடியாக தனது திரை பயணத்தை தொடங்கிய வரலட்சுமி சரத்குமார் தற்போது தெலுங்கில் முன்னணி வில்லியாக கலக்கிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் வில்லியாக நடித்து அனைரையும் மிரள வைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“