Advertisment

HBD Simbu: எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து நிற்கும் சிம்பு!

தமிழ் சினிமாவின் அரசனாக, சிலம்பரசன் இருப்பதற்கு காரணம் அவருடைய விடாமுயற்சி, தன்னம்பிக்கை, போர்குணம் அவரை நேசிக்கும் உண்மையான ரசிகர்கள்.

author-image
WebDesk
New Update
HBD Simbu: எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து நிற்கும் சிம்பு!

"சிலம்பரசன்" என்பது வெகுஜன மக்களுக்கு வெறும் ஒரு பெயராக இருக்கலாம், ஆனால் தமிழ் சினிமாவிற்கு அது ஒரு அடையாளம், ரசிகர்களுக்கு அது ஒரு உத்வேகம்,எதிரிகளுக்கு அது ஒரு மிரட்சி.

Advertisment

ரசிகனை ரசிக்கும் தலைவன்:

பெரும்பாலும் ரசிகர்கள் தங்களுடைய ஆஸ்தான நடிகரின் படங்கள்     வெளிவரும்போது மட்டுமே நடிகர்களோடு துணை நிற்பார்கள். ஆனால் இவருக்கோ நான்கு ஆண்டுகளாக படம் வெளிவரவில்லை, இருந்தாலும் இவரை நேசிக்கும் ரசிகர் கூட்டத்தில் ஒருவர் கூட குறையவில்லை என்பதுதான் இவர் சேர்த்து வைத்த மிகப் பெரிய சொத்து. சரியாக படம் வெளிவருவதில்லை, சூட்டிங்கிற்கு கரெக்டாக வருவதில்லை, திரைக்கதையில் தலையிடுகிறார் என்பது போன்ற பல குற்றச்சாட்டுகள் இவர் மீது இவருடைய எதிரிகளால் வைக்கப்பட்டிருந்தாலும் இவருடைய ரசிகர் படை மட்டும் எப்படி குறையாமல் இருக்கிறது? என இவருடைய எதிரிகளே இவரை வியந்து பார்க்கும் ஓர் உன்னத தலைவன். தன்னை நம்பியவர்களை சிம்பு ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதற்ககேற்ப தன்னுடைய தலைவன் தங்களுக்காக மீண்டும் வருவான் என நம்பியிருந்த அவரது ரசிகர்களுக்காக இன்று மீண்டும் புத்துணர்ச்சியுடனும், உத்வேகதுடனும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் சிம்பு.

சோதனைகளை தாண்டி சாதித்த தமிழன்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு மேடையில் "சோதனைகளைக் கடந்தால்தான் சாதனை செய்ய முடியும்" என்று பேசி இருப்பார். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பவர் சிம்பு."சிம்பு என்றாலே சிக்கல்" என்று சொல்லும் அளவிற்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை தாண்டி இன்றும் தமிழ் சினிமாவின் அரசனாக, சிலம்பரசன் இருப்பதற்கு காரணம் அவருடைய விடாமுயற்சி, தன்னம்பிக்கை, போர்குணம்         இவையெல்லாம் தாண்டி எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி அவரை நேசிக்கும் உண்மையான ரசிகர்கள்.

ஸ்டைல் அரசன்:

தன்னுடைய நம்பிக்கையாலும், திறமையாலும், கடின உழைப்பாலும் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி முத்திரையை பதித்தவர் இவருடைய தந்தை டி.ராஜேந்தர். 1983'ல் பிறந்த சிம்பு,1984'ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த "உறவு காத்த கிளி" படத்தின் மூலம் தன்னுடைய முதல் வயதிலேயே சினிமாவில் அறிமுகமானார். இன்னும் சொல்லப்போனால் சிறு வயதில் இருந்தே நடிப்பவர் என்ற பெருமை கமலஹாசனுக்கு உண்டு ஆனால் அவரை விட ஒரு படி மேலே சினிமாவில் நெருக்கம் கொண்டவர் தான் சிலம்பரசன்.

ஹீரோக்களுக்கே அறிமுக பாடல் இல்லாத அந்த காலகட்டத்தில் டி.ஆர் இயக்கிய "சம்சார சங்கீதம்"படத்தில் குழந்தை நட்சத்திரமான சிம்புவுக்கு அறிமுக பாடல் வைத்து  ஆச்சரியப்படுத்தி இருந்தார் டி.ஆர். அந்த பாடல் தான் "ஐ.எம்.எ லிட்டில் ஸ்டார் ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்", தன் மகனின் எதிர்கால நிலையை அப்போதே கணித்து இப்பாடல் வரிகள் மூலம் எழுதியிருந்தார் டி.ஆர்.

அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு வெளிவந்த "காதல் அழிவதில்லை" படத்தின் மூலம் சிம்பு கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இப்படத்தில் சிம்புவின் நடிப்பு,வேகம், வசன உச்சரிப்பு, வசீகரம்,  நடனம் என தன்னுடைய தனி ஸ்டைல் மூலம் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்தார்.

இளைய சூப்பர் ஸ்டார்:

அதன் பிறகு "தம்,குத்து" போன்ற படங்கள் மூலம் ஆக்சன் நாயகனாகவும் அவதாரமெடுத்தார். ஹரி இயக்கத்தில் வெளிவந்த "கோயில்"திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்டு வந்து சேர்த்தது. குறிப்பாக இன்று இருக்கும் பல பெண் ரசிகைகள் இப்படத்தின் மூலம் ஈர்க்கப்பட்டவர்கள்தான். அதன் பிறகு தானே கதை திரைக்கதை எழுதி "மன்மதன்" படத்தில் நடித்தார் சிம்பு.இப்படம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்றது குறிப்பாக இளைஞர்களிடம் இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்படம் தொடங்கிய போது சில படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்திருக்கிறார், அதற்குள் கதை திரைக்கதை, இதெல்லாம் இவருக்கு அவசியமா?இவருக்கு அதை பற்றி என்ன தெரியும்?சிம்பு கரியர் அவ்ளோதான்,,என்று பல விமர்சனங்களுக்கு ஆளானார் சிம்பு. ஆனால் அதையெல்லாம் படத்தின் வெற்றியின் மூலம் தனது பதிலடியாக திருப்பிக் கொடுத்தார். "மன்மதன்" வெற்றியை தொடர்ந்து,"வல்லவன்" படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கவும் செய்திருந்தார் சிம்பு. இப்படமும் பல பிரச்சனைகளை சந்தித்து ஒரு வழியாக படம் வெளியானது இப்படம் சிம்புவுடைய  மைல்கல் வெற்றியாக அமைந்திருந்தது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மெகா ஹிட் அடித்ததால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு இருந்தது,  எதிர்பார்ப்புகளை மிஞ்சிய பெருவெற்றியை சிம்புவிற்கு இப்படம் கொடுத்தது.

சிம்புவிற்கு பெரும் இளைஞர்கள் பட்டாளத்தை இப்படம் உருவாக்கிக் கொடுத்தது. இவரை "இளைய சூப்பர் ஸ்டார்" என்று தமிழ் சினிமா கொண்டாடும் அளவிற்கு உச்சத்தை தொட்டார் சிம்பு.அதன்பிறகு காளை, சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் அவை எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை இதனால் சற்று துவண்டு போயிருந்த சிம்புவிற்கு ஜாக்பாடாக வந்த படம் தான் "விண்ணைத்தாண்டி வருவாயா". 2010'ல் வெளிவந்த இப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது என்று தான் சொல்ல வேண்டும். இப்படம் அடைந்த பெருவெற்றி சிம்புவின் கரியரை பல மடங்கு  உயர்த்தி அவரை தமிழ் சினிமாவின் உச்சத்தில் அமர வைத்தது.

சர்ச்சை நாயகன்:

சில சில பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருந்தாலும் சிறப்பாக சென்று கொண்டிருந்த இவரது திரை வாழ்க்கை 2010'ஆம் ஆண்டிற்கு பின் சோதனை வாழ்க்கையாக மாறியது. ஏன் இவருக்கு மட்டும் இப்படி நடக்கிறது? என்று இவருடைய எதிரிகளே கலங்கும் அளவிற்கு பிரச்சனைகளிலும், எதிர்ப்புகளிலும் சிக்கித் தவித்தார் சிம்பு.அந்த காலகட்டத்தில் தான் இவர் பாடிய "பீப் பாடல்" திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானது.அதன் பிறகு அவர் சில சங்கங்களால் சந்தித்த  பிரச்சனைகள் நாம் அனைவரும் அறிந்ததே. அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு "AAA" படத்திற்காகவும் மிகப்பெரிய அளவில் பிரச்சனைகளை சந்தித்தார், இன்று வரை அதை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார். இதனிடையே காதல் தோல்விகள், சினிமாவில் ரெட்கார்ட், வாலு பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள்,எல்லா பக்கமும் அவரை தாக்கியது.ஆனால் எப்போதும் தைரியத்தையும், நம்பிக்கையும் கைவிடாத சிம்பு அந்நிலையிலும் தொடர்ந்து அமைதி காத்து வந்தார்.

"ATMAN சிலம்பரசன்":

தொடர்ந்து சினிமாவில் நடிக்கலாமா?வேண்டாமா? என சிம்பு யோசித்ததாகவும் கூட செய்திகள் வெளியாகின.அந்த சோதனை சூழல்களில் அவருக்கு ஆதரவாக இருந்தது அவருடைய உண்மையான நண்பர்களும், ரசிகர்களும் மட்டும்தான். அந்த ரசிகர்களின் பேரன்பினாலும், ஆதரவினாலும் நெகிழ்ந்து போன சிம்பு இவர்களுக்காகவாவது தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன் பிறகும்  சிம்புவிற்கு உடல் எடை ஏறிவிட்டது, முன்பு போல் அவரால் நடிக்க முடியாது,நடனம் ஆட முடியாது

,சிம்பு கரியர் அவ்வளவுதான் ,சிம்பு முடிந்து விட்டார் என்றெல்லாம் பல செய்திகள் விமர்சனங்கள் எழுந்தன அவற்றுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தனது உடல் எடையை குறைத்து புதிய "Atman சிலம்பரசனாக" என்ட்ரி கொடுத்து ரசிகர்களை சந்தோஷத்திலும் எதிரிகளை அதிர்ச்சியிலும் ஆழ்த்தினார் சிம்பு.

மைல்கல்லாக மாறிய மாநாடு:

இப்போது எல்லாம் சரியாகி விட்டது என்று சிம்புவும் அவருடைய ரசிகர்களும் சற்று ஆனந்தமடைந்த நிலையில் மீண்டும் அவருக்கு பிரச்சனை "மாநாடு"படத்தின் மூலம் வந்தது. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் அப்படத்தை தீபாவளிக்கு வெளியிட முடியவில்லை இதனால் மிகவும் நொந்து போன சிம்பு அப்படத்தின் விழாவில் கண் கலங்கியது அவருடைய ரசிகர்களையும் கண்கலங்க வைத்தது. அவ்விழாவில் பேசிய அவர் "பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்,என்னை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று ரசிகர்களை நோக்கி பேசிய பேச்சு இன்றளவிலும் அவர் ரசிகர்களால் அதை மறக்க முடியாது. சிம்பு பப்ளிசிட்டிக்காக தான் இப்படி செய்கிறார், சிம்புவிற்கு மார்க்கெட்டே இல்லை,மாநாடு படமும் ஓடாது,என்றெல்லாம் அப்போது அவரது எதிரிகளும்,அவரை பிடிக்காதவர்களும் கிண்டல் செய்தனர். ஆனால் அப்படம் வெளிவந்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது சிம்புவின் திரை வாழ்வில் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்த படம் "மாநாடு". இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். "மாநாடு" கொடுத்த பெருவெற்றியின் மூலம் தான் யார்? என்பதை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு நிரூபித்தார் சிம்பு. அதன் பிறகு அவர் நடிப்பில் வெளிவந்த "வெந்து தணிந்தது காடு" படமும் மிகப்பெரிய வெற்றியடைந்து சிம்பு ரசிகர்களை பேரானந்தத்தில் ஆழ்த்தியது.

சின்ன கமலஹாசன் சிம்பு:

"தலைவன் மீண்டு வர மாட்டானா?" என்று ஏங்கிக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு "மாநாடு, வெந்து தணிந்தது காடு" என அடுத்தடுத்த பிளாக்பஸ்டர்கள் மூலம் ஆனந்த விருந்தளித்தார் சிம்பு.நடிகர்,கதாசிரியர், இயக்குனர்,பாடகர் டான்சர், நடிகர்கள் வெகு சிலரே அதிலும் கமலஹாசனுக்கு அடுத்து அந்த இடத்தை பிடித்திருக்கிறார் சிம்பு. இதனால் ரசிகர்கள் சிலர் அவரை "சின்ன கமலஹாசன் சிம்பு" என்றும் அன்போடு அழைக்கின்றனர். சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் "பீனிக்ஸ்" பறவையை போல சோதனைகளை கண்டு கலங்காமல் எதிர்த்து நின்று சோதனைகளையே தவிடு பொடியாக்கும் "சிலம்பரசன்" இன்று தன்னுடைய 40 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருடைய திரை வாழ்க்கை மேலும் பல மடங்கு உயரத்தை அடையவும்,தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுக்கவும் இந்த சிறப்பான நாளில் அவரை வாழ்த்துவோம்.

நவீன் குமார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Simbu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment