கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் சிம்பு முதல் ஆளாக நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கேரளாவில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், வயநாடு பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு 400-க்கு மேற்பட்டோர் உயரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வயநாடு சம்பவத்திற்காக தங்களது நிவாரண நிதியை வழங்கியிருந்தனர்.
வயநாடு சம்பவத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்த நிலையில், வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், பல இடங்களில் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் இருந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்கள் மெல்ல மீண்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் மக்களுக்கு நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் சிம்பு முதல் ஆளாக நிவாரண நிதி வழங்கியுள்ளார். வெள்ள பாதிப்பு நிவாரணமாக தெலுங்கு திரையுலக நடிகர்கள் பலரும் நிதியுதவி அளித்து வரும் நிலையில், நடிகர் சிம்பு ரூ6 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“