சிம்பு நடிப்பில் ஓ மை கடவுளே இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தில் சிம்பு காட் ஆப் லவ் என்ற கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளவர் சிம்பு. தனது ஒரு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2002-ம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனி ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்து கோவில், குத்து, மன்மதன், வல்லவன் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார்.
மேலும் தனது 23 வயதில் இயக்குனராக அறிமுகமாகி பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த சிம்பு, ஒரு கட்டத்தில் கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டார். படப்பிடிப்புக்கு தாமதம், பீப் சாங் சர்ச்சை, என பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும், அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அப்படியே தான் இருக்கிறது. அதே சமயம், மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம், படத்தில் நடித்த இவர் அடுத்து கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைப் படத்தில் நடித்துள்ளார்.
தக் லைப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சிம்பு அடுத்து எந்த படத்தில் யாருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற கேள்வியும் எழுந்தது. இதனிடையே சிம்புவின் பிறந்த நாளான இன்று (பிப்ரவரி 3) அவரின் 3 படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49-வது படத்தில் நடித்து வரும் நிலையில், 51-வது படமாக ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயககத்தில் நடிக்க உள்ளார்.
முன்னதாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு தனது 50-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஆத்மன் சினி ஆர்ட்ஸ் என்ற தனது நிறுவனத்தின் முதல் படமாக சிம்புவே தயாரிக்க உள்ளார். இதனிடையே அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் சிம்பு காட் ஆப் லவ் என்ற கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு படத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வரும் நிலையில் சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.