தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் பிரபலம் ஒருவர், அவர் யார் எந்த ஊர் என்று கேட்டு பலரையம் வியப்பில் ஆழத்தியுள்ளார். அதன்பிறகு நடந்த சம்பவம் பெரும் சுவாரஸ்யமாக இருந்துள்ளது.
1952-ம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவாஜி தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் வரிசையாக வெற்றிகளை குவித்த நிலையில், தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகராக இருந்தார். அப்போது இவரது கால்ஷீட் கேட்டு தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டபோதும், பல தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்து படம் நடித்திருந்தார் சிவாஜி.
இந்த காலக்கட்டத்தில் ஒருமுறை தயாரிப்பாளர் சின்ன அண்ணாமலையுடன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையை சந்திக்க சென்றுள்ளனர். இவர்களுடன் சிலர் சென்றிருந்த நிலையில், கவிமணி அனைவரையும் அன்புடன் வரவேற்பு உபரித்துள்ளார். அப்போது சின்ன அண்ணாமலை இவர் தான் சிவாஜி கணேசன் என்று அறிமுகம் செய்ய, அப்படியா, தம்பிக்கு எந்த ஊரு என்ன தொழில் என்று கேட்டுள்ளார்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் இந்த கேள்வியை சற்றும் எதிர்பராத அங்கிருந்தவர்கள் ஆச்சரியம் கலந்த வியப்புடன் பார்த்துள்ளனர். அதன்பிறகு சின்ன அண்ணாமலை. இவர் தான் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிவிட்டு கிளம்பும்போது, அவர் சினிமா படங்கள் அதிகம் பார்ப்பதில்லை. அதனால் உங்களை அவருக்கு தெரியவில்லை என்று சின்ன அண்ணாமலை கூறியுள்ளார்.
இதை கேட்ட சிவாஜி கணேசன், அப்படி இல்லை, நம்மைப்பற்றி பெரிய அறிஞர்கள் இன்னும் அறிந்துகொள்ளவில்லை. அதனால் நாம் இன்னும் நிறைய உழைத்து அவரது கவனத்தை ஈர்க்க வேண்டும். நாம் அதிக புகழ் அடைந்துவிட்டோம் என்று அடைந்த கர்வத்திற்கு இன்று எனக்கு சரியான சாட்டையடி கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். அதன்பிறகு இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்ட நிலையில், ஒரு மாதம் கழித்து ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்துள்ளது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையை சிவாஜி சந்தித்துவிட்டு சென்ற ஒரு மாதத்தில் சிவாஜியின் ஒரு படத்தை பார்த்த கவிமணி, சிவாஜியின் நடிப்பை பாராட்டி ஒரு பெரிய கடிதம் எழுதியுள்ளார். இதை பார்த்த சிவாஜி மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். இந்த தகவலை வாலி பதிப்பகம் யூடியூப் சேனலில், பாரதி சங்கர் என்பது கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“