விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக மாறிய காமெடி நடிகர் சூரி, தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், அவரையே ரசிகர்கள் இன்று பதற வைத்துள்ளனர். அப்படி என்ன நடந்தது?
பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தாலும், வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கவனிக்கப்படும் நடிகராக மாறிய சூரி, அதன்பிறகு தொடர்ந்து பல படங்கில் காமெடி நடிகராக உச்சம் தொட்டார். அவரது காமெடியில் வெளியான தேசிங்கு ராஜா. மனம்கொத்தி பறவை உள்ளிட்ட பல படங்கள், பெரிய வெற்றிப்படங்களாக அமைந்து சூரிக்கும் பெருமை சேர்த்தது.
காமெடி நடிகராக இருந்த சூரி கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக உருவெடுத்தார். வெற்றிமாறன் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தாலும், சூரி ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாகவும், அவரை சுற்றியே கதை நடக்கும் வகையிலும் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், சூரிக்கு கதையின் நாயகனாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
இதனிடையே , விடுதலை படத்தின் 2-ம் பாகம் இன்று (டிசம்பர் 20) வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் சூரி முதல் பாகத்தில் நடித்த போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். மேலும் மஞ்சுவாரியார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், சூரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், விடுதலை 2 படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்க்கதற்காக நடிகர் சூரி திருச்சியில், ஒரு திரையரங்கிற்கு சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசிக்கொண்டிருக்கும்போதே, சூரியை அடுத்த சூப்பர் ஸ்டார், அடுத்த தளபதி என்று அவரது ரசிகர்கள் கோஷம்போட தொடங்கியுள்ளனர். இதை கேட்டு பதறிப்போன சூரி, இதெல்லாம் வேண்டாம்பா, நான் உங்களின் ஒருவனாக இருக்கவே ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“