தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் சூர்யா தற்போது குடும்பத்துடன் மும்பையில் குடியேறியுள்ள நிலையில், அவரின் முழு சொத்து மதிப்பு தொடர்பான தகவல் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்துடன், நேருக்கு நேர் படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. தொடர்ந்து பிரண்ஸ் மற்றும் பெரியண்ணா ஆகிய படங்களில் விஜய் மற்றும் விஜயகாந்துடன் இணைந்து நடித்திருந்த சூர்யா, அடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
இவரது நடிப்பில் வெளியான நந்தா, காக்க காக்க சிங்கம், வேல், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்கள் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வெற்றிப்படங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது. கடைசியாக பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்த சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இந்த படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டுவரும் படமாக மாறியுள்ளது. இந்த படத்தின் மூலம் பாலிவுட் பிரபலம் பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்து சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அதேபோல் இந்தி படங்களிலும் நடிக்க தயாராகி வரும் சூர்யா, தற்போது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்ட நிலையில், அவரின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 186 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“