தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்த முக்கிய தலைவர் எம்.ஜி.ஆர் தான் அதிமுக கட்சியை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்த சாதனைக்கு சொந்தக்காரர். அதேபோல் சினிமாவிலும் நடிகரான தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்துள்ள எம்.ஜி.ஆருக்கு சென்னை பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.
முதல்வராக இருந்த எம்ஜிஆருக்கு சென்னை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக கலை உலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. திரையுலகை சேர்ந்த பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட டி.ராஜேந்தர் பேசிய வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பதிவில், முதலில் எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களுக்கு தனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்ளும் டி.ஆர், என்னை பொறுத்தைவரை நான் மிக மிக சின்னஞ்சிறியவன். தலைவர் அவர்களை பாராட்டும் அளவுக்கு நான் பெரியவன் அல்ல. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்களை நாம் திரையில் பார்த்துவிட்டு இந்த சிறிய வயதில், கைத்தட்டி பாராட்டிய நான் தற்போது மேடையில் வந்து பாராட்டும் வாய்ப்பின்னை பெற்றுள்ளேன்.
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு இன்று கிடைத்திருக்கும் டாக்டர் பட்டம் என்பது அவருடைய புகழ் மகுடத்திலே எத்தனையோ வைரங்களும் மாணிக்க கற்களும் இருக்கின்றன. அந்த மாணிக்க கற்களுக்கு முன்னால் இந்த டாக்டர் பட்டம் என்பது சின்னஞ்சிறு வைரக்கல் தான். இந்த டாக்டர் பட்டத்தை இதற்கு முன்னாலும் சிலர் பெற்றிருக்கலாம். இதற்கு பின்னாலும் பலர் பெறலாம்.
ஆனால் மாண்புமிகு முதல்வர் அவர்கள் மக்களின் நெஞ்சங்களிலே இதய கோவிலியே குடி கொண்டவராக நீங்கள் அளித்த பட்டங்களை பெற்றிருக்கிறாரே புரட்சி நடிகர் மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், வாரி வழங்கும் பாரி வள்ளல் எல்லாவற்றிற்கும் மேலாக புரட்சி தலைவர் என்ற பட்டத்தை பெற்றிருக்கிறாதே இந்த பட்டங்களுக்கு முன்னாள் இந்த டாக்டர் பட்டம் அவரது புகழ் மகுடத்தில் ஒரு சின்னஞ்சிறிய வைரக்கல் தான் என்று பேசியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், நம்பியார், கே.ஆர்.விஜயா, விஜயகுமார், ஸ்ரீதேவி, நளினி, மோகன், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிக்கையாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.