சில ஆண்டுகளாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்த நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த நிலையில், அடுத்து வந்த மாமன்னன் திரைப்படம் அவருக்கு பாராட்டுக்களை குவித்தது. ஆனாலும் அடுத்து பட வாய்ப்பு இல்லாத நிலையில் சின்னத்திரையில் என்ட்ரி ஆக வடிவேலு அதிக சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. வைகை புயல் என்று அழைக்கப்பட்ட இவர், தனது காமெடியின் மூலம் பல ஹிட் படங்களை கொடுத்துள்ள நிலையில், ஹீரோவாகவும், ஒரு சில படங்கில் நடித்துள்ளார். இதில் இம்சை அரசன் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக தயாரிப்பாளர் சங்கம் இவருக்கு தடை விதித்தது.
இதன் காரணமாக சில ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த வடிவேலு, அதன்பிறகு சிக்கல் தீர்க்கப்பட்டு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த படம் ஒரு காமெடி ஹீரோவாக அவருக்கு கை கொடுக்காத நிலையில், அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் வடிவேலுவை ஒரு குணச்சித்திர நடிகராக மக்கள் மத்தியில் அடையாளம் காட்டியது. இந்த படத்தின் மூலம் பலரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.
மாமன்னன் படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராக ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வடிவேலுவுக்கு பட வாய்ப்பு சரியாக அமையாத நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் வடிவேலு என்டரி ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வடிவேலு பெரிய சம்பளம் கேட்டுள்ளதாகவும், இது குறித்து நிகழ்ச்சி குழு, ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் நிலையில், இந்நிகழ்ச்சியின் ப்ரமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“