விஜயகாந்த் ஒரு இரும்பு மனிதன் அவரை இந்த நிலையில் பார்த்தால் நான் அழுதுவிடுவேன் அதனால் தான் நான் அவரை பார்ககவில்லை என்று நடிகர் வாகை சந்திரசேகர் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் தனது நடிப்பு, சக நடிகர்கள் மீதான மரியாதை நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்கான முயற்சி உள்ளிட்ட ஏராளமான செயல்கள் மூலம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சக நடிகர்கள் மத்தியிலும் புகழின் உச்சத்தில் இருப்பவர் விஜயகாந்த்.
சினிமாவில் தான் உச்ச நட்சத்திரம் என்றாலும் கூட, அதை பெரியதாக காட்டிக்கொள்ளாமல், சக நடிகர்களுக் ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக சென்று உதவி செய்பவர். மேலும் இந்தியாவில் எந்த மூலையில் பிரச்சினை என்றாலும் அதற்கு முதல் நன்கொடை கொடுப்பது விஜயகாந்த் தான் என்று நடிகர் சத்யராஜ் ஒரு மேடை பேச்சில் தெரிவித்திருந்தார்.
பெரும்பாலும் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள விஜயகாந்த் குறும்பத்தனத்தில் மன்னன் என்று திரை வட்டாரத்தில் ஒரு பேச்சு இருக்கிறது. இதை அவர் நடித்த காமெடி காட்சிகளின் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம். அதேபோல் சினிமாவில் ராதா ரவி, தியாகு வாகை சந்திரசேகர் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இவர்களின் நட்பு தற்போதுவரை தொடர்ந்து வந்தாலும், விஜயகாந்த் தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஓய்வில் இருந்து வருகிறார்.
மேலும் அவரின் நெருங்கிய நண்பர்கள் பலரும் விஜயகாந்தை சந்தித்து வந்தாலும், வாகை சந்திரசேகர் விஜயகாந்தை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். நெருங்கிய நண்பராக இருந்தும் விஜயகாந்தை சந்திப்பதை வாகை சந்திரசேகர் ஏன் மறுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்த நிலையில், சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் வாகை சந்திரசேகர் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

அந்தக் காலத்தில் விஜயகாந்த் உடம்பு இரும்பு போன்ற பலம் கொண்டதாகவும் தேக்கு உடம்பாக வலிமையுடன் இருப்பார் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளை அதன் தரத்தை அறிய இரும்பு கம்பி மூலம் எடுப்பார்கள். ஆனால் விஜயகாந்த் அவரின் விரலை பயன்படுத்தி சாக்கு மூட்டையிலிருந்து நெல்லை எடுப்பார். அப்படி ஒரு வலிமை கொண்ட மனிதன். திரையில் சண்டை போடுவது போல்நிஜத்தில் ஆயிரம் பேர் வந்தாலும் எதிர்த்து நிற்கும் தைரியம் கொண்டவர். இன்று இருக்கும் நிலையைப் பார்த்து மனதிற்கு வருத்தம் அளிக்கிறது.
ஒரு இரும்பு மனிதனாக பார்த்த விஜயகாந்த் இப்போது இருக்கும் நிலைமையை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது. நான் அவரை பார்க்கச் சென்றால் எனக்கு அழுகையே வந்துவிடும். இதனால் தான் விஜயகாந்தை சந்திப்பதை தவிர்த்து வருகிறேன். என் மகள் திருமணத்திற்கு கூட அவரை அழைக்க வேண்டும் என்று ஆசை தான் ஆனால் இப்போது இருக்கும நிலையை பார்த்து தவிர்த்துவிட்டேன்.
விஜயகாந்தின் இந்த நிலையை கண்டு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றும் இக்காரணங்கலால் தான் நான் இன்னும் அவரை சந்திக்கவில்லை என்று கூறியிருந்தார். மேலும் சீரியஸாக இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயகாந்த் செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லை. கேரக்டருக்காக நான் மீசை ஒட்டியருந்தால் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் என்று சொன்னவுடன் திடீரென ஒட்டியிருந்த மீசையை பிடுங்கிக்கொண்டு சென்றுவிடுவார். இது மாதிரி பல முறை நடந்திருக்கிறது என்று வாகை சந்திரசேகர் விஜயகாந்த் குறித்து பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”