2026'ல அரசியலுக்கு வருவதை உறுதி செய்த விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.அவர் தற்போது நடித்துள்ள "லியோ" படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான வேலைகள் மும்முரமாக ஒரு புறம் நடைபெற்று வர,மற்றொரு புறம் விஜய் அரசியலுக்கு தயாராகி வருவதாகவும் ,பல முன்னணி அரசியல்வாதிகளை விஜய் சந்தித்து ஆலோசனை கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அரசியலுக்கு அடித்தளம் போடும் விஜய் :
அரசியலுக்கு ஆயத்தமாகும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை தனது மக்கள் இயக்கத்தின் மூலம் செய்து வருகிறார் விஜய். தலைவர்களின் சிலைக்கு மாவட்ட நிர்வாகிகள் மூலம் மாலை அணிவிப்பது, தொகுதி வாரியாக ஏழை, எளிய மக்களுக்கு உணவு உட்பட பல நலத்திட்ட உதவிகளை வழங்குவது, கண் தானம் மற்றும் இரத்த தான முகாம்களை நடத்துவது,உலக பட்டினி தினத்தில் தொகுதி வாரியாக மக்களுக்கு உணவு வழங்குவது என தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலம் அரசியலுக்கு அடித்தளம் போட்டு வருகிறார் விஜய்.
இளம் வாக்காளர்களை குறி வைக்கிறாரா விஜய்?
இதில் ஒரு பகுதியாக இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தொகுதிவாரியாக முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா சென்னையில் விஜய் தலைமையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் இதில் கலந்து கொண்டுள்ளார்கள். மேலும் அவர்களுக்கான உணவு,தங்குமிடம் பேருந்து சேவை என அனைத்துமே விஜய் தனது சொந்த செலவில் செய்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் வரை விஜய் செலவு செய்திருக்கிறாராம். இதன் மூலம் இளைய தலைமுறையினர் வாக்கை குறி வைக்கிறாரா விஜய்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மாணவர்களிடம் அரசியல் தீயை பற்ற வைத்த விஜய் :
விழாவில் பேசிய விஜய் "இதுவரைக்கும் பல ஆடியோ லான்ச் விழாக்களில் பேசியிருக்கேன். ஆனா இது எனக்கு ரொம்ப புதுசா இருக்கு,புதுசா பொறுப்புணர்ச்சி வந்ததுபோல உணர்கிறேன். நிறைய புத்தகங்கள் படிங்க எல்லா தலைவர்கள பத்தியும் தெரிஞ்சுக்கோங்க குறிப்பா அம்பேத்கர், பெரியார், காமராஜர் என எல்லாத் தலைவர்களையும் படியுங்கள். நீங்க தான் நாளைய வாக்காளர்கள் உங்களுக்கான புதிய நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்
போறீங்க. நம்ம விரலைவெச்சு நம்ம கண்ணையே குத்துறத்துனு கேள்விப்பட்டு இருக்கீங்களா? அதுதான் இப்ப தமிழ்நாட்டுல நடந்துக்கிட்டிருக்கு. அதைத்தான் நாமும் செய்துகொண்டிருக்கிறோம். அதாவது, காசு வாங்கிட்டு ஓட்டுப்போடுறது.
உதாரணத்துக்கு ஒரு தொகுதியில் ஒன்றரை லட்சம் பேருக்கு ஓட்டுக்கு 1,000 ரூபாய் கொடுத்தால், ரூ.15 கோடி செலவாகும். ஒருத்தர் ரூ.15 கோடி செலவு செய்றாருன்னா அதுக்கு முன்னாடி அவர் எவ்வளவு சம்பாதிச்சிருப்பார்... என யோசிச்சு பாருங்க. தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு மாணவ, மாணவியும் தங்களது பெற்றோர்களிடம் `இனிமே காசு வாங்கிட்டு ஓட்டுப்போடாதீங்க'னு சொல்லுங்க. நீங்க சொன்னா கண்டிப்பா நடக்கும். ஏனென்றால் அடுத்து நீங்கள்தான் முதல் தடவை வாக்களிக்கும் வாக்காளர்களாக வரப்போகிறீர்கள்" என பல அதிரடி அரசியலை மாணவர்கள் முன் அழுத்தமாக பேசினார் விஜய். இது தவிர மாணவர்களுக்கு தேவையான சில அறிவுரைகளையும் வழங்கினார்.
பக்குவப்பட்ட அரசியல் செய்கிறார் விஜய் :
இந்நிகழ்ச்சியை பார்த்த சாமானிய மக்கள் பலரும் ,"விஜய் ஒரு பக்குவப்பட்ட அரசியலை செய்கிறார் எனவும் இதே போல அவர் தொடர்ந்து தனித்துவமாக செயல்பட்டால் நிச்சயம் அரசியலில் அவரால் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு சிலரோ "விஜய் அரசியல் ஆதாயத்துடனே இவைகளை செய்கிறார். அவரால் பெரியளவில் அரசியலில் ஜொலிக்க முடியாது" எனவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
2026 இல் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துவாரா விஜய் ?
இது குறித்து விஜயின் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் கேட்டபோது,"எங்கள் தளபதி நிச்சயம் அரசியலுக்கு வருவார். அதற்கான முன்னேற்பாடுகளை மக்கள் இயக்கம் தீவிரமாக செய்து வருகிறது.அது 2024'ஆ அல்லது 2026'ஆ என்பதை எங்கள் தளபதி தான் முடிவு செய்வார். அவர் என்ன சொன்னாலும் அதை நிறைவேற்ற எங்களுடைய மக்கள் படை தயாராக உள்ளது"என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு விஜய் தொடர்ந்து குரல் கொடுத்தால் அவர் மிகப்பெரிய வாக்குகளை பெற முடியும், அரசியல் என்பது சினிமா அல்ல.அரசியல் செய்ய நிறைய பொறுமையும், சகிப்புத்தன்மையும், போராட்டங்களும், மன உறுதியும் வேண்டும், மேலும் பலவற்றையும் இழக்க நேரிடும். இதற்கு விஜய் தயாராக இருந்தால் நிச்சயமாக 2026'ல் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை அவர் ஏற்படுத்துவார்.
- நவீன் சரவணன்.