தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது விஜய் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாரிசு படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் லியோ. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள நிலையில், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் 19-ந் தேதி லியோ படம் பிரம்மாண்மாக வெளியாக உள்ளது.
இதனிடையே செப்டம்பர் இறுதியில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டது. ஆனாலும் சில பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா நடக்காது என்று செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் பின்னணியில் தமிழகத்தை ஆளும் திமுக செயல்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த சில மாதங்களாக நடிகர் விஜய் அரசியலில் நுழைவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுவதால், ஆளுங்கட்சியின் 'அரசியல் அழுத்தம்' காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர்.
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து குறித்து தயாரிப்பாளர்களிடம் இருந்து அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மைக்ரோ பிளாக்கிங் தளமான எக்ஸ் (ட்விட்டர்) இல் திமுக (‘DMK) பயம் தளபதி விஜய்’ மற்றும் ‘வி ஸ்டாண்ட் வித் லியோ’ என்ற ஹேஷ்டேக்குகளை ட்ரெண்டாக்கத் தொடங்கினர். ஆனாலும் இந்த நடவடிக்கை அரசியல் அழுத்தத்தால் அல்ல' என்று தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்திருந்தாலும் ரசிகர்கள் மீண்டும் அரசியல் அழுத்தம் என்று பதிவிட்டு வருகின்றனர்.
லியோ இசை வெளியீட்டு விழாவை பார்க்க பாஸ் கேட்டு ரசிகர்கள் அலைமோதுவதும், பாதுகாப்பு காரணம் கருதியும் லியோ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடிக்கடி படத்தின் அப்டேட்கள் உங்களுக்காக வெளியிடப்படும். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தம் அல்லது வேறு காரணங்களால் அல்ல, ”என்று செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ விளக்கம் அளித்துள்ளது.
ஆளும் கட்சி குறிப்பாக உதயநிதி ஸ்டாலின், லியோ படத்தின் விநியோக உரிமையை தனது நிறுவனத்திற்கு வழங்காததால், லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை அனுமதிக்கவில்லை என பிரபல தமிழ் யூ ட்யூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் சமூக வலைதளத்தில் கூறியதை தொடர்ந்து திமுகவுக்கு எதிராக ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். செப்டம்பர் 30 ஆம் தேதி ஆடியோ நடைபெறவிருந்த நேரு உள்விளையாட்டு அரங்கம் மாநில அரசுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“