விஜயை பார்க்க வேண்டும் என்பதற்காக அவரது வீட்டு முன்பு உள்ள சிசிடிவி கேமரா முன்பு அழுத ஒரு ரசிகையின் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் அதிக ரசிகர்கள் வைத்துள்ள முக்கிய நடிகர்களில் ஒருவரான விஜய் அவ்வப்போது ரசிகர்களை சந்தித்த அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். அதேபோல் ரசிகர்களை சந்திதக்கவும் தனியாக நேரம் ஒதுக்கி வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் ஒரு பெண் குழந்தை விஜய் அங்கிள் என்னை பார்க்க வரவே மாட்டீங்களா என்று கேட்பது போன்ற வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து விஜய் அந்த குழந்தைக்கு வீடியோ கால் செய்து பேசினார். இது தொடர்பான வீடியோ பதிவும் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தற்போது தனக்கும் நீங்கள் வீடியோ கால் செய்ய வேண்டும் என்று கூறி ரசிகை ஒருவர் விஜய் வீட்டின் முன்பு மன்றாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் அய்யங்கார்குளம் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர். அதே பகுதியில் பானிபூரி வியாபாரம் செய்து வரும் இவரக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஷங்கர் குடும்பத்துடன் கிழக்கு கடற்கரைச்சாலை கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளார். குடும்பத்தில் உள்ள அனைவரும் விஜய் ரசிகர்கள் என்ன நிலையில், அதே பகுதியில் விஜய் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
நடிகர் விஜயை எப்படியாவது பார்த்தவிடலாம் என்ற ஆசையில் அங்கு சென்றபோது விஜய் வீட்டின் கேட் பூட்டப்பட்டிருந்ததால், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தன்னை எப்படியாவது பார்க்க வரவேண்டும் என்று ஷங்கரின் மகள் கெஞ்சியுள்ளார். உங்கள் வீடு வரைக்கும் வந்துவிட்டோம் உங்களைத்தான் பார்க்க முடியவில்லை. இதனை தனது செல்போனில் வீடியோ எடுத்த மாணவியின் அப்பா ஷங்கர் அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் நான் உங்களை பார்க்க வேண்டும் என்னை பார்க்க எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள். நீங்கள் குழந்தையுடன் வீடியோ கால் பேசிய வீடியோவை நான் பார்த்தேன். அதேபோல் என்னிடம் பேசுங்கள் என்று மாணவி கெஞ்சியுள்ளார். மேலும் ஒரே ஒருமுறை உங்களுடன் ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கொள்கிறேன் ப்ளீஸ் என்று மாணவி கேட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த வீடியோவில் மணாவியின் அப்பா ஷங்கர் விஜய் ரசிகர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என் மகள் எப்படியாவது விஜயை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் ஒரு போட்டோ மட்டும் போதும்.நீங்கள் நினைத்தால் என் மகள் ஒருமுறையாகவது அவரை பார்க்க முடியும். என் மகளை ஒருமுறை அழைத்து ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் அது போதும் என்று நடிகர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil