இயக்குனர் அட்லி – பிரியா தம்பதி கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், பிரியா தற்போது கர்ப்பமாக உள்ளார். இவரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில், கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. ஆர்யா நயன்தாரா ஜெய், நஸ்ரியா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில், தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த அட்லி தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்ரில் நடித்து வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு அட்லி நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த திருமணத்தில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இதனிடையே தற்போது பிரியா கர்ப்பமாக உள்ளார். இது குறித்து அறிவிப்பை வெளியிட்ட அட்லி, எங்கள் குடும்பம் வளர்ச்சி அடைகிறது என்பதை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டிருந்தார்.
இதனிடையே பிரியா அட்லியின் வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றுள்ளது. திரைத்துறையின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்ற இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார். முதல் ஆளாக நிகழ்ச்சிக்கு வந்த விஜய் இருவரையும் வாழ்த்தி விட்டு, உங்கள் வாரிசை வரவேற்கிறேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் – அட்லி கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், விரைவில் இவர்கள் 4-வது படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அட்லி அதன்பிறகு ஷாருக்கானுடன் இணைந்துள்ள நிலையில், விஜய் தற்போது தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜூடன் இணைந்துள்ளார்.
இந்த இரு படங்களும் முடிந்த பின் விஜய் அட்லி கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“