Tamil Cinema Update : தமிழ் சினிமாவில் ரெட் கார்டு வாங்கிய நடிகர்கள் என்றால் முதலில் ஞாபகம் வருவது சிம்பு மற்றும் வடிவேலு. ஆனால் இவர்களுக்கு முன்பே தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வரும் விஜய் ரெட் கார்டு வாங்கியுள்ளதாக பிரபல இயக்குநர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை எடுத்து கூறும் படங்களை கொடுத்து புகழ் பெற்றவர் .இயக்குநர் வி.சேகர். கடந்த 1990-ம் ஆண்டு வெளியான நீங்களும் ஹீரோதான் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமகமான இவர், தொடர்ந்து காலம் மாறிப்போச்சு, விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, வீட்டோட மாப்பிள்ளை உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
கடைசியாக தனது கமல் காரல் மாக்சை வைத்து சரவண பொய்கை படத்தை இயக்கினார். இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு படம் இயக்காத சேகர் சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றி்ல் தனது சினிமா அனுபவம் குறித்து சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குநருமான சித்ராலட்சுமனனுடன் பேசிக்கொண்டிருக்கும் வி.சேகர் கூறுகையில்,
பெப்சியில் பாலச்சந்தர் சார் தலைவராக இருந்தபோது நான் துணைத்தலைர். அப்போது பாலச்சந்தர் சார் எனது படத்தின் ஷூட்டிங்கை 10 நாட்கள் நிறுத்தி வைத்து விட்டார். ஒரு சிறிய கருத்துவேறுபாட்டால் அப்படி செய்துவிட்டார். தென்னிந்தியாவாக இருந்த பெப்சி அமைப்பை தமிழ்நாடு என்று மாற்ற அக்ரிமெண்ட் கொண்டுவந்தோம் ஆனால் பண்ண முடியவில்லை. இதற்கிடையே எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் பாலச்சந்தர் சாருக்கும் பரச்சினை ஏற்பட்டது. அப்போது விஜய் கால்ஷூட் பிரச்சினை வர அவருக்கு பாலச்சந்தர் சார் ரெட் கார்டு கொடுத்துவிட்டார்.
ஆனால் விஜய்க்கு ரெட் அடிக்க நடிகர்கள் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது பெப்சி ஏன் செய்யனும் என்று கேட்டேன். இது நான் எடுத்த முடிவு இல்லை. துணைத்தலைவர்கள் எடுத்த முடிவு என்று பாலச்சந்தர்சார் சொன்னார். ஆனால் இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவரிடம் சொன்னேன். அப்போது தான் என்னுடைய பட ஷூட்டிங்கை 10 நாட்கள் தடை செய்தார். அப்போது பத்திரிக்கையாளர்களும், சினிமா இயக்குநர்களும் பாலச்சந்தர் சார் குறித்து ஒரு பேட்டி கொடுக்க சொன்னார்கள். ஆனால் நான் அப்படி செய்யவில்லை.
ஏன்னா அவர் குரு இடத்தில் இருந்து என்னை வழி நடத்தியவர். அதன்பிறகு நானே துணைத்தலைவர்கள் கூட்டத்தை கூட்டி 12 யூனியனிடம் கையெழுத்து வாங்கி கொடுத்தேன். அப்போதுதான் இந்த பிரச்சினை தீர்ந்தது. பாலச்சந்தர் சார் இறப்பதற்கு முன்பு அவரை பார்க்க போயிருந்தேன். அப்போது அவர் எல்லாமே பொய் என்று மனம் வெறுத்து பேசினார். தான் நம்பியவர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதால், மனம் வெறுத்துவிட்டதாக பேசியதாக கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் என்று போற்றப்படும் பாலச்சந்தர் மேடை நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். கடந்த 1965-ம் ஆண்டு வெளியான நீர்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தற்போதைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். மேலும் தமிழ் திரையுலகில் இரு பெரும் துருவங்களாக இருக்கும் ரஜினி கமல் இருவரையும் இணைத்து படம் இயக்கிய பெருமை பெற்றவர் பாலச்சந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil