வருமான வரி அவசியம் என்றால், வருமானவரி செலுத்துபவர்களுக்கு ஏதேனும் பலன் இருக்க வேண்டும் என்று, நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்து வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, மதுரையில் நடைபெற்ற வருமானவரித்துறை, ஏற்பாடு செய்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, வருமான வரி அவசியம் என்றால், வருமானவரி செலுத்துபவர்களுக்கு ஏதேனும் பலன் இருக்க வேண்டும் என்றும், பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, அரசு சார்ந்த சில விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு மற்றவர்களை கேட்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும் குறிப்பாக பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? அவற்றில் உள்ள சிக்கல்கள் போன்றவற்றை எளிமையாக தெரிந்து கொள்வதற்கு அரசு இணையதளம் ஒன்றை உருவாக்கி குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் பான் கார்டு குறித்த விழிப்புணர்வு வீடியோ கார்ட்டூன் வடிவில் வெளியாகியுள்ளது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
அதே நேரத்தில் பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும். பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அது குறித்த தகவல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. வருமானவரித்துறையின் அனைத்து செயல்பாடுகளும் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்பது தான் எனது நோக்கம். இதனால்,அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழிலும் வெளியிட்டால் எல்லோரும் பயனடைவார்கள். நமது உரிமைகளுக்காக அரசாங்கத்திடம் எப்படி கோரிக்கைகளை வைக்கின்றோமோ அதே போன்று நம்முடைய வரிகளை தவறாமல் அரசாங்கத்திற்கு கட்டுவதும் கடமை.
அனைவருமே மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்து தங்களுக்கான வருமான வரியை கட்டி வருகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் பயன் தரும் வகையில் சலுகைகள் இருந்தால் மிக நன்றாக இருக்கும். வருமான வரியை தவறாமல் கட்டிய நபர் பிற்காலத்தில் ஏதேனும் இயலாமல் கஷ்டப்படும்போது அவரை கைவிடாது காப்பாற்றுகின்ற நடைமுறையும் அவசியம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்று விஜய் சேதுபதி பேசியுள்ளார்.