விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த கேரக்டரில் நடிக்க வந்த நடிகை ஒருவர், காட்டில் பாம்பு மற்றும யானை அதிகம் இருப்பதை பார்த்து, இந்த படத்தில் நடிக்க முடியாது என்று விலகி சென்றுவிட்டதாக, நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது திறமையால் எவ்வித சினிமா பின்புலமும் இல்லாமல் வெற்றி கண்ட முன்னணி நடிர்களில் ஒருவராக இருந்தவர் விஜயகாந்த். ஆரம்பத்தில் ஒரு படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும், அதன்பிறகு ஹீரோவாக உச்சம் தொட்ட இவர், பல புதுமுக இயக்குனர்களுக்கும், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார். சினிமாவை கடந்து அரசியலிலும் கால் பாதித்த விஜயகாந்த் குறுகிய காலத்தில் முன்னணியில் வந்து அசத்தினார்.
தற்போது அவர் இல்லை என்றாலும், திரைத்துறையில் அவரைபற்றி பலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே, விஜயகாந்த் நடித்த அவரது 100-வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 22-ந் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவருக்கு 100-வது படம் பெரிய வெற்றியை பெறுவது கடினமாக இருந்த காலக்கட்டத்தில், தனது 100-வது படத்தை பிரம்மாண்ட வெற்றிப்படமாக கொடுத்தவர் தான் விஜயகாந்த். இந்த கேப்டன் பிரபாகரன் படத்தில் அவருடன் இணைந்து சரத்குமார், மன்சூர் அலிகான், காந்திமதி, ரூபினி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த்து.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/09/captain-prapakaran1-2025-08-09-12-15-45.jpg)
குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ஆட்டமா தேரோட்டமா, பாசமுள்ள பாண்டியரே ஆகிய இரு பாடல்கள் மூலம் பட்டிதொட்டி எங்கிலும் சிறப்பாக பிரபலமானவர் தான் ரம்யா கிருஷ்ணன். ஆனால் இந்த படம் தொடங்கப்பட்டபோது, ரம்யா கிருஷ்ணன் நடித்த இந்த கேரக்டரில் நடிக்க கமிட் ஆனவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது, காடுகளில் நடந்த படப்பிடிப்பில் பாம்புகள் மற்றும் யானைகளை பார்த்த அவர், இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று படத்தில் இருந்து விலகியுள்ளார். அதன்பிறகு தான் ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் நடித்துள்ளார்.