நடிகர் தயாரிப்பாளர் அரசியல்வாதி என பன்முக திறமை கொண்ட விஜயகாந்த், ஆரம்ப கட்டத்தில் தான் சினிமா வாய்ப்பு தேடிய அனுபவத்தை கூறிய பழைய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், அரசியலில் குறுகிய காலத்தில் முத்திரை பதித்தவர் என்று பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த். 1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விஜயகாந்த், சட்டம் ஒரு இருட்டறை, நீதி பிழைத்தது, ஈட்டி, நூறாவது நாள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
தொடக்கத்தில் பல வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகரான உயர்ந்த விஜயகாந்த் தயாரிப்பாளராகவும், விருதகிரி என்ற படத்தை இயக்கி ஒரு இயக்குனராகவும் முத்திரை பதித்தவர். தான் நடிகராக இருந்த காலகட்டத்திலும், அரசியலில் இருந்து காலட்டத்திலும் ஏராளமாக உதவிகளை செய்துள்ள விஜயகாந்த் சினிமாவில் சக நடிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்படுகிறார்.

நடிகர்கள் சங்கத்தின் பல ஆண்டு கடனை தீர்த்த பெருமைக்குரிய விஜயகாந்த் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தபோது தான் சந்தித்த முக்கிய இன்னல்கள் கஷ்டங்கள் பல உண்டு என்று பல மேடைகளில் கூறியுள்ளார். அந்த வகையில் அவரது ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பேசிய வீடியோ பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
நான் முதல்முறையாக சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தபோது எக்மோரில்தான் தங்கியிருந்தேன். அங்கிருந்து சினிமா வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்தேன். அப்போ கொஞ்சம் திமிரு இருந்தது. சினிமா அப்டினா என்னானே தெரியாம இருந்தது. அதனால் எல்லா இடத்திலேயே வாய்ப்பு கேட்டு அலைந்தேன். ஆனால் எனக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அதன்பிறகு சோர் பிலிம்ஸ் மர்சூத் என்பவர் எனக்கு ஒரு வாய்ப்பு வாங்கி கொடுத்தார்.
அந்த படத்தில் நான் நடித்துக்கொண்டிருக்கும்போது பாதியில் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அதன்பிறகுதான் உண்மையான சினிமா நிலை என்ன என்பது எனக்கு புரிய ஆரம்பித்தது. அதன்பிறகு நானே கஷ்டப்பட்டு கோடம்பாக்கம் முதல் எங்கெல்லாம் சினிமா கம்பெனி இருக்கோ அங்கேல்லாம் சென்று வாய்ப்பு கேட்டேன். அப்போதுதான் செலவு பண்ணணும், விதவிதமோ போட்டோ எடுக்கனும், முகத்தில் நவரசத்தையும் கொண்டு வரனும்,

அப்படி எல்லாம் வந்து இந்த போட்டோ கேட்பவர்கள் எல்லாரடமும் கொடுக்க வேண்டும். ஆனா அதுல சான்ஸ் கிடைக்குமா கிடைக்காதா என்று பார்க்கும்போது நமது முதலீடு நஷ்டமாகும். ஆனாலும் பரவாயில்லை என்று இருந்தேன். இவன் மெட்ராஸ் விட்டு வரமாட்டேங்கிறானு சொல்லி கோவப்பட்டு எங்க அப்பாவும் எந்த உதவியும் பண்ணல.
நண்பர்கள் உதவியால் தான் நான் கடைசி வரைக்கும் சென்னையில் நடித்துக்கொண்டிருந்தேன். அதன்பிறகு எனது முதல் படம் இனிக்கும் இளமை வந்தவுடன் அதை பார்த்துவிட்டு எங்க அப்பா அதன்பிறகு எனக்கு செலவுக்கு பணம் கொடுத்து உதவினார். ஆனால் படாத கஷ்டப்பட்டுத்தான் இந்த சினிமா உலகில் முன்னேறியிருக்கிறேன்.
என்னுடன் நடிக்க மாட்டேன்னு சொன்ன கதாநாயகிகள் எத்தனையோ பேர், என்னை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சொன்ன இயக்குனர்கள் எத்தனையோ பேர், என்னை வைத்து படம் தயாரிக்க மாட்டேன் என்று சொன்ன தயாரிப்பாளர்கள் எத்தனையோ பேர், எல்லாவற்றை கடந்து இந்த சினிமாவுக்குள் வந்து 181 படம் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு ரொம்ப சந்தோஷம்.ஷ

இந்த சினிமாவில் நாம் யாரையும் விரோதி என்று நினைக்க கூடாது எல்லோரும் நண்பர்கள் என்றுதான் நினைக்க வேண்டும். மார்க்கெட் இருந்தால் நம்மை வைத்து படம் எடுப்பார்கள் இல்லை என்றால் எடுக்க மாட்டார்கள். நான் கடந்து வந்த பாதையை பார்த்தால் இன்றைக்கு இருக்கிறவர்களுக்கு எளிதாக தெரியும். நான் வரும்போது கல்லும் முல்லும் முரடுகளாக இருந்தது.
சில நேரங்களில் கெஞ்சனும், சில நேரங்களில் என் கவுரவம் விட்டுக்கொடுக்காது, சில முறை என்னை வில்லனாக நடிக்க சொன்னார்கள். ஆனால் நான் வில்லனாக நடிக்க மாட்டேன். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தேன். அந்த பிடிவாதத்திற்கு கிடைத்த வெற்றிதான் இது. உழைப்பதற்கு என்றைக்கும் நான் பயப்பட மாட்டேன். அவர்கள் காசு கொடுத்தாலும் கொடுக்கவில்லை என்றாலும் நான் உழைத்துக்கொண்டே இருப்பேன்.
எனது தொழிலுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காக நான் உழைத்துக்கொண்டே இருப்பேன். அதனால் தான் திரைப்படம் எனக்கு மரியாதை கொடுத்ததோ என்று தெரியவில்லை. திரைப்பட கல்லூரி மாணவர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறேன். அவர்களிடம் இருந்து எனக்கு மரியாதை கிடைத்ததது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“