தங்கலான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில், தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா அளவுக்கு உங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இல்லையே என்ற கேள்விக்கு நடிகர் விக்ரம் அளித்துள்ள பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிப்புக்காக எந்த எல்லைக்கும் சென்று தனது தோற்றத்தை மாற்றி நடிக்கும் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் விக்ரம் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் தங்கலான். பா.ரஞ்சித் இயக்கத்தில், பசுபதி, மாளவிகா மோகன், ஹாலிவுட் நடிகர் டெனியல் ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், ஸ்டூடியோகிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது,
சுதந்தர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியாக உள்ள தங்கலான் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக, படக்குழுவினர் தீவிர ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தங்கலான் ப்ரமோஷன் பணிகளில் பங்கேற்று வரும் நடிகர் விக்ரம், பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு அசத்தலாக பதில் அளித்து வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் தற்போது, மதுரையில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சியில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் விக்ரமிடம், தமிழ் சினிமாவில் விஜய் அஜித், சூர்யா அளவிற்கு உங்களுக்கு ரசிகர்கள் இல்லையே என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த விக்ரம், எனது ரசிகர்கள் பட்டாளம் பற்றி உங்களுக்கு சரியாக தெரியவில்லை. தங்கலான் வெளியாகும்போது தியேட்டருக்கு வந்து பாருங்கள். அப்போது என் ரசிகர்கள் பட்டாளம் என்ன என்று உங்களுக்கு தெரியும்.
சினிமாவில் டாப் 3,4,5 என்ற நம்பர் கணக்கெல்லாம் எனக்கு தெரியாது. அதை பற்றி எனக்கு கவலையும் இல்லை. சினிமாவை நேசிக்கும் அனைவரும் எனது ரசிகர்கள் தான். தூள், சாமி போன்று ரசிகர்களை ஈர்க்கும் படங்களையும் செய்திருக்கிறேன். அதுபோன்ற படங்களையும் என்னால் தர முடியும். ஆனால் சினிமாவில் என் தேடல் அதுவல்ல. புதுப்புது கதைகளில் நடிப்பது, நமது சினிமாவை உயர்ந்த தளத்தில் எடுத்து செல்ல வேண்டும் என்பதே என் ஆசை. அதே சமயம் என்னுடைய படங்களில் குறை சொல்லும்படி நான் நடித்திருக்க மாட்டேன்.
நான் நடித்த ராவணன் படம் இந்தியில் ஓடவில்லை. இருந்தாலும் எனது வீட்டில் ராவணன் தான் எனது சிறந்த படம் என்ற சொல்வார்கள். இப்போது தங்கலான் அடுத்து வீர தீர சூரன், என என் வாழ்வின் ஒவ்வொரு படங்களையும் முழு அர்பணிப்புடன் நடித்து வருகிறேன். எனக்கு ரசிகர்கள் இல்லையா என்று கேட்கிறீர்கள். ஒரு நாள் இதே கேள்வியை அவர்களிடம் கேட்பீர்கள் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“