/indian-express-tamil/media/media_files/2025/05/19/RI1mRwd1VclioafUVjcW.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் விஷால். அவரது திரைப்படங்கள் ஒருபுறம் ரசிகர்களைக் கவர்ந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக திருமணம் குறித்து அவ்வப்போது பல்வேறு யூகங்களும் செய்திகளும் வந்த வண்ணம் இருந்தன. பல சமயங்களில் தனது திருமணத்தைப் பற்றி நகைச்சுவையாகவும், அதே நேரத்தில் மர்மமாகவும் விஷால் பதிலளித்து வந்துள்ளார்.
இதனிடையே விஷால் தற்போது தனது வாழ்க்கைத் துணையை கண்டுபிடித்துவிட்டதாகக் கூறியிருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிர்ஷ்டசாலி நடிகை சாய் தன்ஷிகா தான் என்பதுதான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. மனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சாய் தன்ஷிகா, பேராண்மை, மாஞ்சா வேலு, அரவான் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர், ரஜினிகாந்த் மகளாக இவர் கபாலி படத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கு கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ள சாய் தன்ஷிகா, கடைசியாக தமிழில், 2021-ம் ஆண்டு லாபம் என்ற படத்தில் நடித்திருந்தார், சாய் தன்ஷிகாவுக்கும் விஷாலுக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நட்பு தற்போது காதலாக மலர்ந்து விரைவில் திருமணத்தில் முடிய உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த திடீர் தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷால் இதற்கு முன்பு நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னரே திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்திருந்தார். கடந்த பத்து வருடங்களாக அவர் முன்னின்று நடத்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், சமீபத்தில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், "ஆமாம், நான் என் வாழ்க்கைத் துணையை கண்டுபிடித்துவிட்டேன். இது காதல் திருமணம். விரைவில் இதுகுறித்த முழு விவரங்களையும் வெளியிடுவேன்" என்று வெளிப்படையாகக் கூறியது இந்த யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது.
விஷாலின் இந்த வாக்குறுதியும், தற்போதுள்ள சூழலும் கச்சிதமாக பொருந்துவதால், சாய் தன்ஷிகா தான் விஷாலின் மணப்பெண் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்று பலரும் நம்புகின்றனர். சாய் தன்ஷிகா கதாநாயகியாக நடிக்கும் 'யோகி டா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த பொது மேடையில்தான் விஷால் தனது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என்று திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக விஷாலும், சாய் தன்ஷிகாவும் நெருங்கிப் பழகி வந்ததாகவும், அவர்களது நட்பு தற்போது ஒரு அழகான உறவாக மாறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விஷாலும், சாய் தன்ஷிகாவும் இதுவரை இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாவிட்டாலும், விஷாலின் அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். விரைவில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெறலாம் என்றும், இன்னும் நான்கு மாதங்களில் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்றும் செய்திகள் வருகின்றன. மேலும் இது குறித்து விஷால் இன்று அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதனிடையே, தன்ஷிகா நடித்த யோகி டா என்ற படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஷால், இவரை ஹவுஸ் வைப் என்று சொல்வரா, என்னுடைய பெஸ்ட் ப்ரண்ட் என்று சொல்வதா? சோல் மெட் என்று சொல்வதா என்றுடைய பாதியா? என்று தெரியவில்லை. ஆனால், இவரை வாழ்நாள் முழுவதும் இதே சிரித்து முகத்துடன் சந்தோஷமாக வைத்திருப்பேன் என்று கூறியுள்ள நடிகர் விஷால், திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு, சாய் தன்ஷிகாவிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேபோல் 15 வருடங்களாக எனக்கு விஷாலை தெரியும். எனக்கு ஒரு பிரச்னை என்று வரும்போது எனக்காக குரல் கொடுத்துள்ளார். எங்கள் குடும்பத்தில் பிரச்னை வந்தபோது, அவர் எங்கள் வீட்டுக்கே வந்துள்ளள்ளார். எந்த ஹீரோவும் இப்படி செய்வார்களா என்று தெரியாது. இதற்கு மேல் மறை்பபதற்கு ஒன்றும் இல்லை. நாங்கள் ஆகஸ்ட் 29-ந் தேதி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளோம் என்று நடிகை தன்ஷிகா கூறியுள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.