மும்பபையில் தமிழ் படங்களை சென்சார் செய்வதற்காக லஞ்சம் கேட்டனர் என்று நடிகர் விஷால் அளித்த ஆன்லைன் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் தற்போது மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் தனது 34-வது படத்தில் நடித்து முடித்துள்ள விஷால் அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார். தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த விஷால் தற்போது நடிகர் சங்க செயலாளராக இருந்து வருகிறார்.
சினிமாவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் விஷால் சமீபத்தில் தனது மார்க் ஆண்டனி படம் இந்தியில் வெளியிடுவதற்காக சென்சார் செய்யப்பட்டபோது, மும்பை தணிக்கை வாரிய அதிகாரிகள் தன்னிடம் 6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக ஆதாரங்களுடன் ஆன்லைன் மூலம் பிரதமர் மோடி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிரா முதல்வரை டேக் செய்து ட்விட்டர் பக்கத்தில் புகார் அளித்திருந்திருந்தார்.
இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த புகார் குறித்து விசாரணை நடத்த உடனடியாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அதிகாரியை நியமித்தது. இது குறித்து நடந்த விசாரணையில், லஞ்சம் கேட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட அவர்கள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தற்போது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியில் வெளியாகும் தமிழ் படங்களுக்கு இதுவரை மும்பையில் மட்டுமே தணிக்கை சான்று வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி இந்த நிலை இருக்காது என்றும், இந்தியில் வெளியாகும் தமிழ் படங்களுக்கும் தமிழகத்திலேயே தணிக்கை சான்று பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இனி எந்த தயாரிப்பாளரும் தணிக்கை சான்று பெற மும்பை வரை வர தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் இந்த அறிவிப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் நடிகர் விஷாலின் செயலுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“