/indian-express-tamil/media/media_files/FVS8HlxUFgXgMhG3zk3t.jpg)
நடிகர் விஷால்
தனது மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியான சமயத்தில் படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்குமாறு ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாக நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் விஷால் – இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள 3-வது படம் ரத்னம். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 26-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த நடிகர் விஷால் ரெட் ஜெயிணட் நிறுவனம் குறித்து குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், எனது எனிமி படம் தீபாவளிக்கு வெளியான போது ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தில் இருக்கும் ஒரு நபருடன் எனக்கு பிரச்னை ஏற்பட்டது. இது உதய்க்கு தெரியுமா தெரியாதா என்பது எனக்கு தெரியவில்லை. ஒரு படத்தை தள்ளி ரிலீஸ் செய்ய சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. தமிழ் சினிமா யாருக்கும் சொந்தம் இல்லை. என் கையில் தான் சினிமா இருக்கிறது என்று கூறிய எவரும் உருப்பட்டது இல்லை.
என்னுடைய தயாரிப்பாளர் சும்மா ஏசி ரூமில் உட்கார்ந்துகொண்டு, தியேட்டருக்கு போன் செய்து என் படத்தை ரிலீஸ் செய் வேறு எந்த படமும் வரக்கூடாது என்று சொல்லும் தயாரிப்பாளர் இல்லை. அவர் வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர். வட்டிக்கு பணம் வாங்கி வியர்வை சிந்தி படம் எடுத்தால், அதை தள்ளி ரிலீஸ் செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? தமிழ் சினிமாவை நீங்கள் தான் குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களா என்று அவரிடம் கேட்டேன்.
அந்த நபர் எனக்கு தெரிந்தவர் தான். நான் தான் அவரை உதய்-டம் சேர்த்துவிட்டேன். அவரே இப்படி ஒரு விஷயத்தை செய்யும்போது என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மார்க் ஆண்டனி படத்திற்காக எனது தயாரிப்பாளர் ரூ65 கோடி செலவு செய்திருக்கிறார். ஒன்னறை மாதமாக ரிலீஸ் செய்ய காத்திருந்து கடைசியில் ரிலீஸ் தேதி நெருங்கும்போது தள்ளி ரிலீஸ் செய்ய சொன்னதால் எனக்கு கோபம் வந்தது.
நீங்கள் மட்டும் தான் உங்கள் படத்தை ரிலீஸ் செய்து நீங்களே சம்பாதிக்க வேண்டும் என்று எதாவது ரூல்ஸ் இருக்கிறதா? நான் அதே தேதியில் ரிலீஸ் செய்ததால் தான் என் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்தது, ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நல்ல எதிர்காலம் கிடைத்தது, எனக்கு ஒரு நல்ல வெற்றி கிடைத்தது. நான் அன்று சும்மா இருந்திருந்தால் படம் ரிலீஸ் ஆகியிருக்காது. இப்போது எனது ரத்னம் படத்திற்கு கூட பிரச்சனை வரும். வேண்டுமென்றே வேட்டு வைப்பார்கள்.
இங்கே யாருக்கும் தைரியம் கிடையாது. நட்புக்கும் வியாபாரத்திற்கும் இடையே நான் ஒரு கோடு வரைந்திருக்கிறேன். வியாபாரம் என்பது என்னுடைய உழைப்பு. அதை யாரும் விளையாட்டாக எடுத்துக்கொள்ள நான் விடமாட்டேன் என்று விஷால் ஆவேசமாக கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.