தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தனது மதகஜராஜா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்தபோது உடலில் நடுக்கத்துடன் பேசியதால், அவருக்கு என்ன பாதிப்பு என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இது குறித்து தற்போது அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷால், அதனைத் தொடர்ந்து திமிரு, சண்டக்கோழி, துப்பறிவாளன், இரும்புத்திரை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், கடைசியாக மார்க் ஆண்டனி என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்திருந்தார். அதன்பிறகு ஹரி இயக்கத்தில் நடித்த ரத்னம் படம், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனையடுத்து விஷால் அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
அதே சமயம், சமீபகாலமாக விஷால் குறித்து தகவல்கள் மட்டுமே வெளியாகி வந்த நிலையில், அவரைப்பற்றிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகாமல் இருந்தது. இதனிடையே நேற்று, நடைபெற்ற மதகஜராஜா திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த விஷால், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், பேசும்போது கை நடுக்கத்துடன் பேசியிருந்தார். இதனால் அவருக்கு என்ன பாதிப்பு என்ற கேள்வி எழுந்த நிலையில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி விஷாலுக்கு மலேரியா காய்ச்சல் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், விஷாலுக்கு என்ன பாதிப்பு என்பது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் விஷால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு தயாரான மதகஜராஜா திரைப்படம் 2013-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் படத்தின் வெளியீடு 12 ஆண்டுகள் தள்ளிப்போயுள்ளது.
தற்போது ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ள மதகஜராஜா திரைப்படத்தில் சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள நிலையில், மறைந்த நடிகர் மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்த படத்தை தயாரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“