New Update
/
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்த நடிகர் விவேக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்த நிலையில், அவரது மகள் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர்கள் பட்டாளம் அதிகமாக இருந்தாலும், குறிப்பிட்ட சில நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவது வழக்கம். குறிப்பாக காமெடி நடிகர்களில் ஒருசிலரே ரசிகர்களின் மனதை வென்றவர்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக முத்திரை பதித்தவர் தான் நடிகர் விவேக்.
காமெடி தான் என்றாலும் அதில் மக்களுக்கு தேவையான கருத்துக்களுடன் வழங்குவதில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பிறகு விவேக்தான் என்ற நிலை இருந்தது. இதன் காரணமாக தான் அவருக்கு சின்ன கலைவாணர் என்ற பட்டம் கிடைத்தது. காமெடி நடிகராக இருந்தாலும் குணச்சித்திர கேரக்டர்களிலும் முத்திரை பதித்துள்ள விவேக், வெள்ளைப்பூக்கள், நான் தான் பாலா, உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
பொது வாழ்க்கையிலும் மக்களுக்கு தேவையான கருத்துக்களை வழங்கிய விவேக், முன்னாள் குடியரசு தலைவருடன் நெருக்கமாக இருந்த ஒரே நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார். திரையிலும், நிஜத்திலும் நல்ல மனிதன் என்ற உதாரணத்திற்கு முக்கிய அடையாளமாக திகழ்ந்த விவேக், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே விவேக்கின் மகள் தேஜஸ்வினிக்கு பரத் (எ) வரன் என்பவருடன் இன்று திருமணம் நடைபெற்றது.
சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரின் உள்ள சின்ன கலைவாணர் சாலையில் உள்ள விவேக்கின் இல்லத்தில் இவர்களது திருமணம் எளிய முறையில் நடைபெற்றுள்ளது. மரங்கள் வளர்த்து இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்ந்த விவேக்கின் கனவை நிறைவேற்றும் வகையில், அவரது மகள் மற்றும் மருமகன் இருவரும் திருமணம் முடிந்து மரங்கள் மற்றும் மூலிகை செடிகளை நட்டு வைத்தனர். திருமணத்திற்கு வந்தவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.