விருமன் படத்தின் மூலம் பாடகியாகவும் நடிகையாகவும் அறிமுகமாக அதிதி ஷங்கர் தற்போது தான் படித்த மருத்துவத்தை கையில் எடுத்துள்ள புகைப்படங்கள் இணயைத்தில் வைரலாகி வருகிறது.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி ஷங்கர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான இவர், தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
குறிப்பாக மாவீரன் படத்தில் அதிதி கேரக்டர் முக்கியத்துவம் இல்லாமல் போனது என பல விமர்சனங்கள் எழுத்தது. ஆனாலும் தற்போது இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஒரு படம், ராம்குமார் இயக்கும் அடுத்தப்படம் என அதிதி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். விருமன் படத்தின் மதுரை வீரன் பாடலை பாடியிருந்த இவர், மாவீரன் படத்திலும் ஒரு பாடலை பாடியிருந்தார்.
இதனிடையே அதிதி கழுத்தில் டேக், மருத்துவர் உடை, முகத்தில் மாஸ்க், தலையில் கேப் அணிந்து ஒரு மருத்துவராக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு டாக்டர் ஏ என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். மருத்துவ படிப்பு முடித்துள்ள அதிதி, விருப்பத்தின் பேரில் சினிமாவில் நடிக்க வந்தவர். ஆனால் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் பல சந்தேககங்களை கிளப்பியுள்ளது.
விருமன், மாவீரன் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றதால் அதிதி மீண்டும் தனது மருத்துவ தொழிலுக்கு திரும்பிவிட்டாரா, அல்லது அவர் அடுத்து நடித்து வரும் படங்களில் இது ஒரு கேட்டப்பா என்று ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“