/indian-express-tamil/media/media_files/2025/09/09/avanthika-1-2025-09-09-19-42-32.jpg)
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் அவந்திகா மோகன், தன்னிடம் காதலை சொன்ன 17 வயது சிறுவனுக்கு, நச்சென்று ஒரு பதிலை சொல்லி அவருக்கு புரிய வைத்ததாக ஒரு சமூகவலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமரின் பிரபல நடிகை அவந்திகா மோகன், ‘யக்ஷி ஃபைத்ஃபுல்லி யுவர்ஸ்’, ‘நீலகாசம் பச்சக்கடல் சுவன்னா பூமி’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார். இவருக்கு சமீபத்தில் 17 வயது ரசிகர் ஒருவர் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்து வந்தார். இதற்கு அவந்திகா மோகன் நகைச்சுவையான அதே சமயம் அறிவுபூர்வமான பதிலைக் கூறியதாகவும், இந்த ரசிகர் ஒரு வருடத்திற்கும் மேலாக இதுபோன்ற மெசேஜ்களை அனுப்பி வருவதாக அவந்திகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,நீங்கள் எனக்கு நீண்ட காலமாக இந்த மெசேஜ்களை அனுப்பி வருவது எனக்குத் தெரியும். நீங்கள் இன்னும் மிகவும் இளமையான சிறுவன், உங்களுக்கு 16 அல்லது 17 வயதாக இருக்கலாம், வாழ்க்கையைப் பற்றி இன்னும் புரிந்துகொள்ளும் வயதில் இருக்கிறீர்கள். ஒரு வருடமாக என்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கேட்டு வருகிறீர்கள், நீங்கள் மிகவும் விடாப்பிடியானவர் என்று சொல்ல வேண்டும். இதில் நீங்கள் மிகவும் பிடிவாதமாக இருக்கிறீர்கள் என்பதை என்னால் காண முடிகிறது. ஆனால் இப்போதைக்குத் திருமணத்தைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, உங்கள் தேர்வுகளில் கவனம் செலுத்துங்கள்.
நீங்கள் என்னைவிட மிகவும் இளையவர். நாம் திருமணம் செய்தால், மக்கள் என்னைக் உங்கள் மனைவியாகப் பார்க்க மாட்டார்கள்; அவர்கள் என்னைக் உங்கள் தாயாகவே பார்ப்பார்கள். அதனால்தான், இப்போதைக்கு உங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். உங்கள் காதல் கதை சரியான நேரத்தில் நிச்சயமாக நடக்கும். அன்பும் ஆசீர்வாதங்களும்!” என்று கூறி தனது பதிவை முடித்தார்.
அவந்திகா எதிர்மறை கருத்துகளைத் தெரிவிப்பவர்களுக்குப் பதிலளிப்பது இது முதல் முறையல்ல. 2024-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின்போது, கொல்கத்தாவில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவிற்கு, ஒரு நபர் “உங்களைப் போன்றவர்கள் எப்படிப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாமல் இருக்க முடியும்?” என்று எழுப்பி இருந்தார்.
இந்த கேள்விக்கு பதில் அளித்த அவந்திகா, “இன்றைய தினம் நான் பதிவிட்ட கதை! பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதைப் பற்றியது. இந்தக் கருத்தைப் பாருங்கள், இந்த மனிதர் ஆபத்தானவர்! இவரைப் போன்ற ஒரு மனிதர் நம் சமூகத்தில் வாழ்வது வெட்கக்கேடான விஷயம்” என்று தக்க பதிலடி கொடுத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.