இசையமைப்பாளர் தான் பாடிய ஒரு பாடலை மாற்றி பதிவு செய்துவிட்டார் என்று கூறி நடிகை பானுமதி படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அதன்பிறகு என்ன நடந்தது என்பது குறித்து ஏ.வி.எம்.குமரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Advertisment
தென்னிந்திய சினிமாவில், நடிகை, பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் பானுமதி. சினிமாவில் எல்லா துறைகளிலும் தனது திறமையை வளர்த்துக்கொண்ட இவர், தனக்கு தோன்றுவதை அப்படியே பேசும் தைரியசாளி என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம். அதேபோல் தனது படங்களில் தன்னை விட யாரும் சிறப்பாக நடித்துவிட கூடாது என்பதால் அவர்களுடன் போட்டி போட்டு நடிக்கும் மனப்பான்மை கொண்டவர்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள பானுமதி, உண்மை என்ன என்று தெரியாமல் இசையமைப்பாளருடன் சண்டை போட்டதால் படப்பிடிப்பு சிறிது நேரம் தடைபட்டது என்று ஏ.வி.எம்.குமரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை பானுமதி நடிப்பில் கடந்த 1962-ம் ஆண்டு வெளியான படம் அன்ணை.
பானுமதி, சவுகார் ஜானகி, எஸ்.வி.ரங்காராவ், சந்திரபாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்திற்கு, சுதர்சன் இசையமைத்திருந்தார். பணக்காரரான பானுமதிக்கு குழந்தை பிறக்காது என்று தெரிந்தவுடன், ஏழ்மை நிலையில், இருக்கும் தனது தங்கை சவுக்கார் ஜானகியின் பிள்ளையை தத்தெடுத்து இனிமேல் இவனை நீ பார்க்கவே கூடாது என்று சொல்லிவிட்டு வந்துவிடுவார்.
Advertisment
Advertisements
ஒரு கட்டத்தில் சவுக்கார் ஜானகியின் கணவர் இறந்துவிட, பானுமதி அவரது மகனை ராமேஸ்வரத்திற்கு அழைத்து சென்று திதி கொடுக்க செய்வார். இதற்காக ரயிலில் சென்றுகொண்டிருக்கும்போது பானுமதியின் மனசாட்சி பாடுவது போன்ற ஒரு பாடல் தான் ‘’அன்ணை என்பவள் நீதானா’’ என்ற பாடல். கண்ணதாசன் இந்த பாடலை எழுத, பானுமதியே இந்த பாடலை பாடியுள்ளார். கம்போசிங்கின்போது இடையில் பானுமதி இசையமைப்பாளராக பல பரிந்துரைகளை கூறியுள்ளார்.
பானுமதி சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிவிட்டு, இறுதியில் தனது இசை என்னவோ அதையே சுதர்சன் கொடுத்துள்ளார். இந்த பாடல் படப்பிடிப்பு நடந்தபோது, பாதியில் நிறுத்திய பானுமதி நான் பாடியதை மாற்றி இருக்கிறீர்கள். சுதர்சனை கூப்பிடுங்கள் என்று சொல்ல, சுதர்சன் வந்து எதையும் மாற்றவில்லை. நீங்கள் பாடிய மற்றொரு ட்ராக்கை கட் செய்து இதில் வைத்திருக்கிறேன் என்று சொன்னாலும் நம்பாத பானுமதி, ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் பாடிய இரு ட்ராக்களும் ப்ளே செய்யப்பட்டபோது உண்மை என்ன என்று தெரிந்துகொண்டுள்ளார்.
அதன்பிறகு தனது தவறை உணர்ந்த பானுமதி சுதர்சனிடம் மாஸ்டர் என்னை மன்னித்துவிடுங்கள். நான் பாடியதை நன்றாக மாற்றி இருக்கிறீர்கள் என்று மன்னிப்பு கேட்டுவிட்டு அதன்பிறகு படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இந்த தகவலை ஏ.வி.எம்.குமரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“