இவர் என்னை தாண்டி நடித்துவிட்டார், அங்கேயே என் கேரக்டருக்கு பலம் இல்லாமல் போய்விட்டது. அதனால் இந்த படத்தில் மீண்டும் என்னால் நடிக்க முடியாது என்று நடிகை பானுமதி ஏ.வி.எம். படத்தின் படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.
இந்திய சினிமாவில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர் என பன்முக திறமை கொண்ட நடிகை என்று பெயரேடுத்த பானுமதி, தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். 1939-ம் ஆண்டு வெளியான வரா விக்ரயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான பானுமதி அதே ஆண்டு வெளியான சந்தன தேவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து ராஜமுக்தி, அபூர்வசகோதரர்கள், லைலா மஜ்னு, நல்லதம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பானுமதி, எம்.ஜி.ஆருடன் அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், ராஜா தேசிங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பல திறமைகளை உள்ளடக்கியிருநதாலும் பானுமதி தனக்கு பிடிக்கவில்லை என்றால், படத்தின் பாதியிலே படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறிவிடுவார்.
அந்த வகையில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த அன்னை படத்தில் இருந்து நான் இனிமேல் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று வெளியேறியுள்ளார். 1962-ம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் அன்னை. பானுமதி, சவுக்கார் ஜானகி, நாகேஷ், சந்திரபாபு, உள்ளிட்ட பலர் நடித்திருந்தது. பெங்காலி நாவலை அடிப்படையாக கொண்டு திரைக்கதை எழுதப்பட்ட இந்த படத்திற்கு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனம் எழுதியிருந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போது கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படப்பிடிப்பு தளத்தில் இருக்க வேண்டும் என்று மெய்யப்ப செட்டியார் கூறியிருந்தார். அதன்படி படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், ஒருநாள் பானுமதி, நான் இனிமேல் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு உடனடியாக படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இதை தெரிந்துகொண்ட ஏ.வி.மெய்யப்ப செட்டியார், இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சுவுடன் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை அனுப்பி பானுமதியிடம் விசாரிக்க கூறியுள்ளார்.
அதன்படி பானுமதி வீட்டுக்கு சென்ற இவர்கள் மூவரையும், நன்கு உபசரித்துள்ளார். அதன்பிறகு படப்பிடிப்பில் இருந்து வெளியேறியது குறித்து கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்த பானுமதி இந்த கதை ஒரு தாயின் பாச போராட்டம். குழந்தைக்கு பெற்றவள் சிறந்த தாயா? அல்லது வளர்த்தவள் சிறந்த தாயா? என்பதை நிரூபிக்கும் இந்த படத்தில், இன்று படமாக்கப்பட்ட காட்சியின் என் கணவர் இறக்கும் தருணத்தில் நான் தான் உனது அம்மா என்று என் பிள்ளையிடம் சொல்ல எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்று சவுகார் ஜானகி திறமையாக வசனத்தை பேசி அசத்தினார். அதற்கு என் கேரக்டரில் பதில் என்ன?
என் கேரக்டர் அங்கே அமைதியாக இருந்ததால், அங்கேயே என் கேரக்டருக்கான பலம் இல்லாமல் போய்விட்டது. இனி இந்த படத்தில் நான் எவ்வளவு தான் ஈடுகொடுத்து நடித்தாலும், அது சரியாக இருக்காது என்று கூறியுள்ளார். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கிருஷ்ணன் பஞ்சு இருவரும் கேட்க, சவுக்கார் ஜானகி பேசியது சரிதான். அவருக்கு ஈடுகொடுக்கும் மாதிரியான வசனம் எழுத வேண்டும். அப்போ தான் இந்த படம் வெற்றியடையும் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு இந்த குறிப்பிட்ட காட்சிக்கு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மீண்டும் வசனம் எழுத பானுமதி சிறப்பாக நடித்து அசத்தியுள்ளார். இந்த படமும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. புதிய வசனம் எழுதி முடித்தவுடன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை அழைத்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார், இதற்காகத்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும்வரை உன்னை கூடவே இருக்க சொன்னேன். இப்போது தெரிகிறதா என்று கேட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“