/indian-express-tamil/media/media_files/2025/08/15/dhakshini-2025-08-15-21-36-16.jpg)
சினிமா உலகில் 'அட்ஜஸ்ட்மென்ட்' கலாச்சாரம், அதிகமாக உள்ளது என்று பல்வேறு நடிகைகள் கூறி வரும் நிலையில், எனக்கும் இதுபோன்று இருந்தது, ஆனால் நான் அதற்கு இடம் கொடுக்கவில்லை. பெண்கள் சரியாக இருந்தால், 'அட்ஜஸ்ட்மென்ட்' என்ற ஒன்று இருக்காது என்று அண்ணாமலை படத்தில் ரஜினியின் மகளாக நடித்த நடிகை தாட்சாயினி கூறியுள்ளார்.
இது குறித்து திரைமொழி யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், சினிமா உலகில் 'அட்ஜஸ்ட்மென்ட்' என்பது பற்றிப் பல தவறான கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால், ஒரு பெண் கண்ணியம் மற்றும் சுயமரியாதைதான் அவருக்குப் பாதுகாப்பானது. சில நடிகைகள் வேண்டுமென்றே எல்லோரிடமும் சகஜமாகப் பழகி, சிரித்து, நெருக்கமாகப் பேசும்போது, யார் வேண்டுமானாரும் கை பிடித்து இழுக்கத்தான் செய்வார்கள். இவர்கள் கூப்பிட்டாலே வந்துடுவாங்க என்ற எண்ணம் ஏற்படும்.
ஒரு பெண் தனது வரம்பை உணர்ந்து கண்ணியமாகப் பழகினால், ஜெனியானா வராங்க, போறாங்க, நடிக்கிறாங்க என்று இருந்தால், அவரை யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டார்கள். சினிமா மற்றும் டிவி என எந்த இன்டஸ்ட்ரியாக இருந்தாலும், ஒருவரை வற்புறுத்தி, வலுக்கட்டாயமாகத் தவறான செயல்களில் ஈடுபடுத்த முயற்சிப்பது என்பது நடக்காத ஒன்று. அவ்வாறு யாராவது நடந்து கொண்டால், உடனடியாக அவரை வெளியில் அனுப்பிவிடுவார்கள். மீண்டும் அவர்களை சேர்த்துக்கொள்ள மாடடார்கள்.
அதையும் மீறி, சிலர் தங்களுக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தவறான பாதைக்கு ஒப்புக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், ஒருமுறை நீங்கள் தவறான பாதையில் சென்றுவிட்டால், அதன் பிறகு உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் கடினம். திரும்ப கூப்பிடவே மாட்டார்கள். சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் இருப்பவர்கள் நிச்சயம் நீண்ட காலம் நிலைத்து நிற்பார்கள்.
என் திரையுலக பயணத்தில் நான் எதிர்கொண்ட ஒரு சுவாரஸ்யமான அனுபவம் இது. அண்ணாமலை படத்திற்கு முன்பு, நான் 'ஈரமான ரோஜா' படத்தின் இந்தி ரீமேக்கான அபி அபி என்ற படத்தில் நடித்தேன். அப்படத்தில் கவிதா ஸ்ரீ (காதலன் படத்தில் போலீஸ் வில்லி) முக்கிய கதாபாத்திரத்தில் இருந்தார். நான் அவரது தோழியாக நடித்தேன். ஒருமுறை படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, இயக்குனர் என்னிடம், "வெளியே போய் லன்ச் சாப்பிடலாமா, வருகிறீர்களா?" என்று கேட்டார். நான் உடனடியாக "வேண்டாம் சார், நான் ஏன் வர வேண்டும்?" என்று மறுத்துவிட்டேன். எனக்குத் அப்போது எந்தவித பயமும் இல்லை.
அதன் பிறகு, படப்பிடிப்பில் எனக்கான வசனங்கள் எதுவும் இல்லாமல் சும்மா நின்றுகொண்டிருப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டன. எனக்கு அது ஏனோ சரியாகப் படவில்லை. உடனடியாகத் தயாரிப்பாளரிடம் சென்று, "ஏன் என்னை நடிக்க வைக்கிறீர்கள்? எனக்கு எந்த வசனமும் இல்லை. அதற்காக ஏன் எனக்கு ரூ5000 சம்பளம் எதற்காக? நீங்கள் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டை ரூ.100 சம்பளத்தில் நடிக்க வைத்திருக்கலாமே. ஒரு நிறுவனத்தின் நடிகையாக என்னை நியமித்துவிட்டு, சும்மா நிற்க வைப்பது ஏன்?" என்று தைரியமாகக் கேட்டேன். எனக்குத் தைரியம் வந்ததற்குக் காரணம், என்மீது எனக்கு இருந்த நம்பிக்கைதான்.
நான் உறுதியுடன் இருந்தால், ஒரு வாய்ப்பு இல்லையென்றால் இன்னொரு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை. நான் இப்படி வெளிப்படையாகப் பேசியபோது, அங்கிருந்த கவிதா ஸ்ரீ அதை இந்தி மொழிபெயர்த்து அந்தத் தயாரிப்பாளரிடம் விளக்கினார். அவரும் எனது நிலையை புரிந்துகொண்டு, எனது தைரியத்தைப் பாராட்டினார் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.