/indian-express-tamil/media/media_files/2025/08/13/hema-malini-2025-08-13-17-57-59.jpg)
தமிழ்நாட்டில் பிறந்து பாலிவுட் சினிமாவில் உச்சம் தொட்ட வெகுசில நடிகைகளில் முக்கியமானவர் ஹேமா மாலினி. பாலிவுட்டின் ‘கனவுக்கன்னி’ எனப் போற்றப்படும் இவர், 76 வயதிலும் தனது வசீகரத்தால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். ‘டிரீம் கேர்ள்’ என்ற பட்டத்திற்குப் பொருத்தமான அவரது அழகு, கருணை, மற்றும் நடிப்புத் திறன்கள், தலைமுறைகளைத் தாண்டித் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன.
அதே சமயம், அவரது திரை வாழ்க்கை எவ்வளவு வெற்றி பெற்றதோ, அதே அளவு காதல் வாழ்க்கையும் மிகவும் சிக்கலாகவும், சுவாரசியமாகவும் இருந்துள்ளது. 1963-ம் ஆண்டு கே.சங்கர் இயக்கத்தில் வெளியான இது சத்தியம் என்ற தமிழ் படம் தான் இவர் சினிமாவில் அறிமுகமான முதல் படம். அதன்பிறகு தமிழில் நடிக்காத இவர், 37 ஆண்டுகளுக்கு பிறகு, கமல்ஹாசன் இயக்கிய ஹேராம் படத்தில் நடித்திருந்தார். முழுக்க முழுக்க இந்தி சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய ஹேமா மாலினி முன்னணி நட்சத்திரமாக வளர்ந்தார்.
இவரின் அழகில் மயங்கியவர்கள் பலர். அதில் இந்திய சினிமாவின் மூன்று முன்னணி நடிகர்களும் அடக்கம். அவர்களில் ஒருவர், இறுதிக் காலத்தில் அவரது கணவரானார். யார் அந்த மூன்று பேர்? அவர்களின் காதல் கதை என்ன? பார்ப்போம். ‘சீதா அவுர் கீதா’ (1972) திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, ‘ஹவா கே சாத்-சாத்’ பாடலுக்கு நடனமாடிய ஹேமா மாலினியைக் கண்ட சஞ்சீவ் குமாருக்கு, அவர் மீது காதல் ஏற்பட்டது. அவரது காதல் மிகவும் தீவிரமாக இருந்தது.
சஞ்சீவ் குமாரின் தாயார், ஹேமா மாலினியின் குடும்பத்திடம் திருமணப் பேச்சுவார்த்தைக்காகச் சென்றார். ஆனால், அப்போது திருமணத்திற்குப் பிறகு, ஹேமா மாலினி நடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற பெரிய நிபந்தனை வைத்தார். இந்த நிபந்தனையை அவராலும், அவரது தாயாராலும் ஏற்க முடியவில்லை. ஏனெனில், சஞ்சீவ் குமார், தனது தாயைக் கவனித்துக் கொள்ளக்கூடிய ஒரு பாரம்பரியமான மனைவியைத் தேடினார். ஆனால், ஹேமா மாலினி ஒரு நடிகையாகவும், சுதந்திரமான பெண்ணாகவும் இருக்க விரும்பினார். இதனால், இந்தத் திருமணம் கைவிடப்பட்டது.
இதன் பிறகு, ‘துல்ஹன்’ (1974) திரைப்படத்தில் ஜீதேந்திராவுடன் ஹேமா மாலினி இணைந்து நடித்தார். அப்போது, அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. ஜீதேந்திரா, அப்போது ஷோபா கபூருடன் காதலில் இருந்த நிலையில், ஹேமா மாலினிக்கும், ஜீதேந்திராவுக்கும் இடையே வளர்ந்து வந்த காதலை அறிந்த ஷோபா கபூர், தர்மேந்திராவின் உதவியை நாடியதாகக் கூறப்படுகிறது. தர்மேந்திரா இவர்களுக்கு இடையே பேசியதால், ஜீதேந்திராவுக்கும், ஹேமா மாலினிக்கும் இடையேயான காதல் முறிந்தது.
அதே சமயம், தர்மேந்திராவுக்கும், ஹேமா மாலினிக்கும் இடையேயான பிணைப்பை மேலும் வலுப்படுத்தியது. அப்போதே திருமணம் ஆகி, பிரகாஷ் கவுர் என்பவருடன் வாழ்ந்துவந்த தர்மேந்திராவுக்கும், ஹேமா மாலினிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்தக் காதல், பல சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தது. திருமண உறவில் இருந்ததால், தர்மேந்திராவுக்கு ஹேமா மாலினியைத் திருமணம் செய்ய சட்டரீதியான சிக்கல்கள் இருந்தன.
இதன் காரணமாக இருவரும் மத மாற்றத்தைச் செய்துகொண்டு திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதன்படி, தர்மேந்திரா 'திலாவர்' என்றும், ஹேமா மாலினி 'ஆயிஷா' என்றும் பெயர்களை மாற்றிக்கொண்டதாக 'ராம் கமல் முகர்ஜி' எழுதிய ஹேமா மாலினியின் சுயசரிதையில் கூறப்பட்டுள்ளது. பாரம்பரியமான ஐயங்கார் முறையில் 2 முறை திருமணம் நடந்தது. 13 வருட வயது வித்தியாசம் இருந்தாலும், அவர்களின் காதல் உறுதியாக இருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.