தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் இஷா கோபிககர், தான் நடிக்க வந்த புதிதில், தன்னை ஒரு நடன இயக்குனர் அவமானப்படுத்திவிட்டதாக கூறியுள்ளார்.
தெலுங்கில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான வொய்ப் ஆப் வீர பிரசாத் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இஷா கோபிகர். தொடர்ந்து பிரஷாந்த் நடித்த காதல் கவிதை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து, அரவிந்த் சாமியுடன் என் சுவாச காற்றே, விஜயுடன் நெஞ்சினிலே, விஜயகாந்துடன் நரசிம்மா, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார், 2001-ம் ஆண்டு வெளியான நரசிம்மா படத்திற்கு பிறகு, 23 ஆண்டுகள் இடைவெளியில் 2024-ம் ஆண்டு அயலான் படத்தில் நடித்திருந்தார்.
இடையில் இந்தி சினிமாவில் நடித்து பிரபல முன்னணி நடிகையாக வளர்ந்த இஷா கோபிகர், பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'டான்' படத்தில் நடித்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் சிறப்பாக நடனமாடியதால், 'கல்லாஸ் கேர்ள்' என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இஷா கோபியர், தென்னிந்திய திரையுலகில் தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய ஆரம்ப நாட்களில், அவர் சந்தித்த அவமானங்கள் குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார்.
ஒரு நேர்காணலில், தனது சினிமா பயணத்தின் துவக்கத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி பேசியுள்ள இஷா, ஒரு தென்னிந்திய படப்பிடிப்பில், நடன இயக்குநர் ஒருவர் அனைவர் முன்னிலையிலும் அவரை அவமானப்படுத்தியுள்ளார். "இந்த பாலிவுட் பெண்கள் எல்லாம் ஏன் சினிமாவுக்கு வருகிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. இவர்களுக்கு ஒன்றுமே தெரியாது!" "டான்ஸ் ஆடத் தெரியவில்லை என்றால், ஏன் இங்கு வந்தீர்கள்?" என்றும் கூறி அவமானப்படுத்தியுள்ளார்.
இந்த வார்த்தைகள் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. மிகவும் அவமானமாக உணர்ந்த நான், என் மேக்கப் அறைக்குச் சென்று அழுதேன்," ஆனால், இந்த அவமானத்தை சவாலாக எடுத்துக்கொண்டு, "அடுத்தமுறை தென்னிந்திய சினிமாவுக்கு நான் வரும்போது, நடனம் கற்றுக்கொண்டு வருவேன். யாரும் என்னை அப்படிப் பேச அனுமதிக்க மாட்டேன்," என்று சபதம் எடுத்து, இந்தச் சவாலை நிறைவேற்ற, நடனக் கலையில் புகழ்பெற்ற சரோஜ் கான் அவர்களிடம் பயிற்சி பெற்றேன் என்று கூறியுள்ளார்.
இந்த கடுமையான பயிற்சிக்குப் பிறகு,ராம்கோபால் வர்மா இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'கம்பெனி' திரைப்படத்தில் இடம் பெற்ற 'கல்லாஸ்' பாடலில் இஷாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த ஒரே பாடலின் மூலம் அவர் 'கல்லாஸ் கேர்ள்' எனப் புகழ்பெற்றார். இதன் பிறகு, இஷ்க் சமுந்தர், ஆங்கேன் மாரேன், ஆஜ் கி ராத் போன்ற பல பாடல்களில் இஷா தனது நடனத் திறமையை நிரூபித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.