கடந்த சில நாட்களாக நடிகை கீர்த்தி சுரேஷ் டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக தனது காதலர் ஆண்டனியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அடுத்து அவருடன் இணைந்து ரெமோ, உள்ளிட்ட படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், விஜய்க்கு ஜோடியாக பைரவா, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக மகாநடி என்ற படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார். மகாநடி படத்திற்காக தேசிய விருதையும் பெற்றிருந்த கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். மாமன்னன் படத்தில் புரட்சிப்பெண்ணாக இவர் நடித்திருந்தது பலரின் பாராட்டுக்களை பெற்று தந்தது.
அதேபோல் ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்தே படத்திலும் நடித்திருந்தார். இந்த படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது அட்லி இயக்கத்தில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ரகு தாத்தா படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக தனது 15 ஆண்டுகால காதலர் ஆண்டனியுடன் கீர்த்தி சுரெஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு நடிகைகள் மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன், ராஷி கண்ணா, ஹன்சிகா, த்ரிஷா, சுந்தீப் கிஷன், வாணி போஜன் மற்றும் நஸ்ரியா ஃபஹத் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் என்று கூறப்படும் ஆண்டனிக்கு சொந்த ஊரான கொச்சியில் அவருக்கு சொந்தமான ரிசார்ட்ஸ் உள்ளது. இந்த இளம் ஜோடி திருமணம் வரும் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கோவாவில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“