நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கடுமையான காய்ச்சல் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, ரஜினி, கமல், சரத்யாராஜ், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது படங்களில் முக்கிய கேரக்டரட்களில் மட்டும் நடித்து வரும் நடிகை குஷ்பு அரசியலில் தொடர்ந்து ஆக்டீவாக இருந்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் அவருக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. பதவியில் இருந்தாலும் கட்சிப்பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் நடிகை குஷ்பு, சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் மக்களுக்கு விழிப்புணர்வு தொடர்பான தகவல்களை அளித்து வரும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் பரவி வருவதால் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதனிடையே நடிகை குஷ்பு இன்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ள குஷ்பு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும் “நான் ஏற்கனவே சொன்னது போல் புளூ காய்ச்சல் என்பது மிகவும் மோசமானது. அது என்னை பாதித்துவிட்டது. காய்ச்சல், உடல் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நான் அதிர்ஷ்டவசமாக அப்பல்லோ மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை பெற்று வருகிறேன் என கூறியுள்ளார்.
இதுபோன்ற அறிகுறிகள் நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். குஷ்புவின் ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil