பிரபுதேவா நடித்த ஒரு படத்தில் கமிட் ஆன லைலா, தயாரிப்பாளர் மீது கோபமடைந்ததால் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படுவர் பிரபுதேவா. நடிகர் இயக்குனர், நடன இயக்குனர் என பன்முக திறமைகொண்ட இவர், தமிழில் இந்து என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் காதலன் என்ற படத்தில் நடித்திருந்த இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான படம் தான் வி.ஐ.பி.
இயக்குனர் சபாபதி தட்சினாமூர்த்தி இயக்கிய இந்த படத்தை கலைப்புல எஸ் தானு தயாரித்திருந்தார். சிம்ரன், ரம்பா அப்பாஸ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். மணிவண்ணன், அனுமோகன் ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தில் முதலில் கமிட் ஆனவர் நடிகை லைலா. சிம்ரன் கேரக்டரில் நடிக்க இருந்த லைலா படத்தின் பூஜைக்கு வந்துள்ளார். மேலும் படத்தின் பூஜைக்கான இன்வடேஷனில்' லைலா, ரம்பா என்றுதான் அச்சிட்டுள்ளனர்.
படத்தின் பூஜை சென்னை பாம்க்ரோ ஹோட்டலில் நடைபெற்ற நிலையில், லைலா வருவதற்கு முன்பாகவே, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, அவருக்கான அட்வான்ஸ் பணத்திற்காக செக்கில் கையெழுத்து போட்டு ரிஷப்ஷனில் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்த லைலாவிடம், ரிஷப்ஷனில் இருந்தவர்கள் செக்கை கொடுக்க, தயாரிப்பாளர் என்னை பார்க்கவே இல்லையே, என்ன தயாரிப்பு நிறுவனம் இது, என்னை வந்து பார்க்கவில்லை என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டுள்ளார்.
இதை கேட்ட தயாரிப்பு மேனேஜர் செல்வம் என்பவர் கலைப்புலி தாணுவிடம் சொல்ல, ஆரம்பமே இப்படியா அவரை தூக்கிடலாம் என்று சொல்லி, லைலாவை படத்தில் இருந்து நீக்கியுள்ளார். அதன்பிறகு அந்த கேரக்டருக்கு யார் நடிப்பது என்று தேடிக்கொண்டிருக்கும்போது சிம்ரன் தேர்வாகியுள்ளார். இதுதான் சிம்ரன் தமிழில் அறிமுகமான முதல் படம் இதன்பிறகு விஜய் அஜித் சூர்யா, கமல்ஹாசன், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவது சிம்ரன் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“