விஜயுடன் குஷி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நடிகை மும்தாஜ் தான் சினிமாவில் இருந்து விலகியதற்காக காரணம் குறித்து உருக்கமாக பேசியுள்ளது தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான மோனிஷா என் மோனாலிசா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானர் மும்தாஜ். தொடர்ந்து சத்யராஜூ நடிப்பில் வெளியான மலபார் போலீஸ் படத்தில் நடித்த இவர், விஜயுடன் குஷி, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சாக்லேட், வேதம் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
மேலும் ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருந்தார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்து வந்த மும்தாஜ் கடைசியாக 2007-ம் ஆண்டு வெளியான டி.ராஜேந்தரின் வீராசாமி படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு ராஜாதிராஜா படத்தில் வில்லியாக நடித்த மும்தாஜ், 2015-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான டாமி படத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகினார்.
மேலும் 2018-ம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் பங்கேற்ற மும்தாஜ், ஒரு கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். இதனிடையே தற்போது தான் ஏன் சினிமாவில் இருந்து விலகினேன் என்று மும்தாஜ் வெளிப்படையாக நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நான் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு குர்ஆன் பற்றி நன்றாக தெரியும். ஆரம்பத்தில் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து அர்த்தம் தெரியாமல் இருந்தேன். ஒரு கட்டத்தின் அதன் அர்த்தம் எனக்கு புரிய தொடங்கியபோது எனக்குள் மாற்றம் ஏற்பட்டது. அதன் காரணமாகத்தான் சினிமா இனி வேண்டாம் என்று முடிவு செய்தேன். நான் சினிமாவை கைவிடுவதற்கு அல்லாஹ்தான் காரணம்.
நான் ஒரு வீட்டில் அமர்ந்திருந்தபோது என்னை அறியாமல் நான் என் ஆடைகளை சரி செய்தேன். வெளியே செல்லும்போது கன்னியமான உடை அணிந்தேன். சினிமாவில் நீச்சல் உடை அணிந்து நடித்த நான் இப்போது இப்படிப்பட்ட உடைகள் அணிவது நிச்சயமாக அனைவருக்கும் வித்தியாசமானத்தான் இருக்கும். இப்போது நான் ஹிஜாப் அணிந்து முழு முஸ்லீம் பெண்ணாக மாறி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“