/indian-express-tamil/media/media_files/2025/09/12/rai-lakshmi-2025-09-12-06-43-42.jpg)
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை ஒருவர் சில வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்து வரும் நிலையில், தற்போது அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேப்டனுக்கு காதலியாகவும், அஜித்துக்கு வில்லியாகவும் நடித்த இந்த நடிகை யார் தெரியுமா?
அந்த நடிகை ராய் லட்சுமி தான். கடந்த 2005-ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ராய் லட்சுமி. அதன்பிறகு, வடிவேலு பார்த்திபன் கூட்டணியில் வெளியான குண்டக்க மண்டக்க என்ற படத்தில் நாயகியாக பார்த்திபன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து 2006-ம் ஆண்டு வெளியான தர்மபுரி படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்திருந்தார்
இந்த படத்தில் விஜயகாந்த் வேலைக்காரராகவும், எம்.எஸ்.பாஸ்கர் அவரது முதலாளியாகவும் நடித்துக்கொண்டு இருப்பார்கள். அதே சமயம், முதலாளி தான் தனது முறைப்பையன் என்று தெரிந்தும், வேலைக்காரராக இருக்கும் விஜயகாந்தை துரத்தி துரத்தி காதலிப்பார் லட்சுமி ராய். இறுதியில் வேலைக்காரராக இருக்கும் விஜயகாந்த் தான் உண்மையான முதலாளி என்று தெரியவரும். இயக்குனர் பேரரசு இயக்கிய இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது.
அதன்பிறகு நெஞ்சை தொடு, ரகசிய சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ராய் லட்சுமி, ரவி மோகன் நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். அடுத்து வாமனன், நான் அவனில்லை 2, ஒரு காதலன் ஒரு காதலி ஆகிய படங்களில் நடித்திருந்த இவர், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா ஆகிய படங்களில் லாரண்ஸ்க்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த இரு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், காஞ்சனா பெரிய வெற்றிப்படமாக மாறியது,
2011-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா படத்தில் சோனா என்ற கேரக்டரில் நடித்திருந்த ராய் லட்சுமி அஜித்துக்கே வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வெற்றிப்படமாக மாறியது. அதன்பிறகு, தாண்டவம், அரண்மனை, சவுக்கார் பேட்டை ஆகிய படங்களில் நடித்திருந்த ராய் லட்சுமி கடைசியாக சின்ரல்லா என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
லெஜண்ட் சரவணா நடித்த தி லெஜண்ட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய ராய் லட்சுமி, கடைசியாக டி.என்.ஏ என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.