ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்னர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாணமாக தயாரித்துள்ள நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயிலர் படம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) வெளியாக உள்ளது.
இதனிடையே படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழு மற்றும் ரசிகர்கள் என பலரும் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், பான் இந்தியா படமாக வெளியாகும் ஜெயிலர் வசூலில் பல சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில், பல இடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் ஜெயிலர் படத்தின் ஜூரம் அடித்து வரும் நிலையில், சிறிது அமைதி காண முடிவு செய்துள்ள ரஜினிகாந்த் இன்று இமயமலை பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருந்த நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தொற்று காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இமயமலை பயணம் மேற்கொள்ளாமல் இருந்த நிலையில், தற்போது இந்த புனித பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“